கொரோனாவினால் வந்த பெரிய மாற்றம்…மெல்ல, மெல்ல சைக்கிளுக்கு மாறும் பொதுமக்கள்…!!

பங்களாதேஷில் சில மாதங்களாக இருந்து வந்த முடக்க நிலை தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து அந்நாட்டின் வீதிகளில் போக்குவரத்து வழமையைப் போலஆரம்பித்துள்ளது. எனினும், சமூக இடைவெளியை பேணும் நோக்கிலும் நாட்டின் நெருக்கடி மிக்க வீதிகளில் மக்கள் பயணிப்பதை இலகுபடுத்தவும் பங்களாதேஷ் மக்கள் சைக்கிள்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.பங்களாதேஷில் வீதிப் போக்குவரத்து கடந்த மே மாதமே ஆரம்பித்து விட்டது.இதையடுத்து முச்சக்கர வண்டிகளும், கூட்ட நெரிசலுடன் கூடிய பஸ்களுமே வீதிகளில் பெரும் இடத்தைப் பிடித்துக் கொண்டன. பங்களாதேஷில் நடுத்தர வர்க்கத்தினரே அதிகமாக உள்ளனர். இவர்களது போக்குவரத்து பெரும்பாலும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் மூலமே இடம்பெற்றன.கார் போன்ற வாகனங்கள் வீதிகளில் செல்கையில் பெரும்பாலான இடைஞ்சல்களுக்கு உள்ளாகின.இந்த நிலையில் தமது போக்குவரத்துக்கு அதிக அளவிலான பங்களாதேஷ் வாசிகள் இப்போது சைக்கிள்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். வேலைக்குச் செல்லவும், பாடசாலைகளுக்கு சிறுவர்களை கொண்டு செல்லவும் இப்போது சைக்கிள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகிறது.சைக்கிள்களின் விற்பனையும் இப்போது வெகுவாக அதிகரித்துள்ளது. முன்னர் ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு சைக்கிள்களை மட்டுமே விற்று வந்த நிலையில் இப்போது ஒரு நாளைக்கு பத்துப் பன்னிரண்டு சைக்கிள்கள் விற்பனையாவதாக சைக்கிள் கடை நடத்தும் மொஹம்மட் இப்ராஹிம் என்ற வர்த்தகர் கூறுகிறார்.அதிக அளவிலான மக்கள் இப்போது பஸ்கள், ரெக்ஸிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக சைக்கிளில் பயணம் செய்வதையே விரும்புவதாக அவர் மேலும் கூறுகிறார். 10 ஆயிரம் டாக்கா என்ற விலையில் விற்கப்படும் நடுத்தர ரக சைக்கிள் பெரும்பாலும் விரைவில் விற்று தீர்த்துள்ளதாக அவர் கூறுகிறார்.

பாடசாலைக்குச் செல்வதற்கும் வேலைக்குப் போவதற்கும் சைக்கிளே உகந்தது. இதனால் நான் இரண்டு புதிய சைக்கிள்களை வாங்கி வைத்துள்ளேன்” என்று வேலைக்குச் செல்லும் பகுதிநேர மாணவர் ஒருவர் கூறுகிறார்.
பங்களாதேஷின் அனைத்து நகரங்களிலும் சைக்கிள்களின் விற்பனை அண்மைக் காலத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக பங்களாதேஷ் சைக்கிள் உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு வருடமும் சுமார் 15 இலட்சம் புதிய சைக்கிள்கள் பங்களாதேஷில் விற்பனையாவது வழமையாகும். இந்த வருடம் அது இரட்டிப்பாக அதிகரிக்கும் என்று நம்புவதாக அச்சங்கம் மேலும் கூறியுள்ளது.சைக்கிள்களின் பாவனை காரணமாக எரிபொருள் வாகனங்களின் பாவனை குறையக் கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.