பல்வேறு புத்தாக்க சிந்தனைகளுடன் யாழ்ப்பாணத்தில் உதயமாகும் இலங்கை சைக்கிள் கழகம்.!!

ஒரு காலத்தில் சைக்கிள்களின் தலைநகரம் என்று சொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தில் இலங்கையின் முதலாவது சைக்கிள் கழகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.புலம்பெயர் தமிழரான சுரேஷ்கணபதியின் சிந்தனையில் இந்தக் கழகத்திற்கான முகப் புத்தக இலச்சினையை தெரிவு செய்வதற்கான போட்டிகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.

ஹொலண்ட் தேசத்தில் 2000 ஆண்டு தொடங்கப்பட்ட சைக்கிள் திருவிழாவைப் பார்த்த சுரேஷ் அவர்களின் எண்ணத்தில் உதித்த சிந்தனையின் வெளிப்பாடாக 2017ல் கிளிநொச்சி மாநகரில் இடம்பெற்ற சைக்கிள் திருவிழா நிகழ்வு மூலம் இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.சுற்றுலாப் பயணிகளுக்கான இலகுவான பாதுகாப்பான போக்குவரத்து சாதனமாக இதனை மாற்றுவதும், குறித்த சைக்கிள் கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அத்துடன் வெவ்வேறு வடிவங்களினால் சைக்கிள்களை உருவாக்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும். ஒரே குடும்பத்தில் 4 அல்லது ஐந்து பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து செல்லக் கூடிய சைக்கிள்களை உருவாக்குவதும் இவர்களின் நோக்கமாக அமைந்திருக்கின்றது. அத்துடன் கைவிடப்பட்ட பழைய சைக்கிள் உதிரிப் பாகங்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி புதிய வடிவிலான சைக்களிள்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பெருமளவு இரும்பு கழிவுப் பொருட்களுக்கு மறுவடிவம் கொடுத்து சைக்கிள்களாக மாற்றுகிறார்கள்.அத்துடன் மட்டுமல்லாமல் புதிய வடிவிலான சைக்கிள்களை உருவாக்குவதற்கு இதற்கென உலகின் பல பாகங்களிலிருந்தும் பல்வேறு விதமான சைக்களிள்களை சேகரித்து வருவதுடன், புலம்பெயர் மக்களில் பலரும் இவர்களது முயற்சிக்கு ஆதரவாக தம்மிடமுள்ள வித்தியாசமான சைக்கிள்களை இவர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இலங்கையின் முதலாவது சைக்கிள் கழகத்தை ஆரம்பிப்பதற்கு வசதியாக யாழ் நகர் இலுப்பையடிச் சந்தியில் இதற்கென பிரத்தியேக அலுவலகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில், கழத்தின் துணைத் தலைவரான செல்வராசா நந்தகோபால் ஈடுபட்டுள்ளார்.