கொரோனாவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தி 100 மருத்துவர்களை பலிகொடுத்த இத்தாலி..!! கண்ணீர் விடும் ஒரு தேசத்தின் சோகம்…!!

இரக்கமற்ற கொடிய முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தோன்றியதாக சொல்லப்பட்டாலும், அந்நாட்டை விடவும் ஐரோப்பாவை கடுமையாக உலுக்கிக் கொண்டிருக்கிறது இந்த வைரஸ். பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கையில் உலக வல்லரசான அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. அங்கு நாளுக்கு நாள் பலியாகிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.அதேபோன்று, இத்தாலி கொரோனாவால் அதிகளவானவர்களை பலிகொடுத்த தேசமாக கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறது.இத்தாலியில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் மருத்துவர்களும் அங்கு அதிகளவில் பலியாகியிருப்பது அந்நாட்டு மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. அங்கு கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்த 100 மருத்துவர்கள் இதுவரை பலியாகி உள்ளனர்.மருத்துவர்கள், தாதியர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனாவுக்கு எதிராக போராடுவதாக அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இத்தாலியில் கொரோனா தாக்குதலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். 1,43,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இத்தாலியில் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் உயிரிழப்பு 100ஐ கடந்துள்ளது என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 30 மருத்துவ பணியாளர்கள், தாதியர்கள், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இத்தாலி மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரதுறையில் பணியாற்றுகின்றனர். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இனி எவ்வளவு நாள் தான், எங்கள் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்களை, கொரோனாவுக்கு எதிராக போராட அனுப்புவது. சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்களை மருத்துவ பணிக்கு அனுப்புவது ஆயுதமின்றி போருக்கு செல்வதற்கு சமம்’ இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளது.