நல்லைக்கந்தன் ஆலய திருவிழா பாதுகாப்பு கடமைகளில் களமிறங்கும் இராணுவம்..!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வீதித் தடைகள், அடியவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி தொடக்கம் பொலிஸார் தேர்தல் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.இதன் காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் மீளப்பெறப்பட்டு இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.