மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர்களைக் கோரி இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராகும் இலங்கை..!

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கைப் பாதுகாப்பதற்காக இந்திய ரிசேர்வ் வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக, இருதரப்பு பரஸ்பர பரிமாற்றல் உடன்படிக்கையின் கீழ் மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கைப் பாதுகாப்பதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாக இந்திய ரிசேர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த வசதி எதிர்வரும் 2022 நவம்பர் மாதம் வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் ரிசேர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாதிப்படைந்திருக்கும் இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கைச் சீர்செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியிருந்தார்.கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தத்தமது நாடுகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பில் கடந்த மே மாதம் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அதனையடுத்து வெளிநாட்டு நாணய ஒதுக்கைப் பாதுகாப்பதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்ததுடன், இதுகுறித்த விபரங்களை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே இலங்கை அரசாங்கத்திற்கும் மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் கடந்த வாரஇறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.இத்தகையதொரு பின்னிணியில் இதுகுறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இந்திய ரிசேர்வ் வங்கியுடனான விசேட இருதரப்புப் பரஸ்பர பரிமாற்றல் உடன்படிக்கையின் கீழ் மேலதிகமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை மத்திய வங்கியும் இந்திய ரிசேர்வ் வங்கியும் 2019 – 2020 காலப்பகுதிக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் நாணயப்பரிமாற்றல் உடன்படிக்கைக் கட்டமைப்பின் கீழ் 2020 ஜுலை 24 ஆம் திகதி நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இது நாட்டின் சென்மதி நிலுவைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு மத்திய வங்கிக்கு குறுகியகால நிதியிடலை வழங்கும்.

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கை குறைபாடற்ற விதத்தில் பேணும் அதேவேளை, தேவையானளவு குறுகியகால வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையைப் பராமரிப்பதே இந்திய ரிசேர்வ் வங்கியுடனான இந்தப் பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தத்தில் முக்கிய நோக்கமாகும். இவ்வுடன்படிக்கையின் கீழ், ஆரம்பத்தில் மூன்று மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்கு இலங்கை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் என்பதுடன் ஏற்கனவேயுள்ள சார்க் கட்டமைப்பின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீதான உடன்படிக்கைக்கு உட்பட்டு ஒவ்வொன்றும் மூன்று மாதங்களைக் கொண்ட இரு தடவைகள் நீடிப்புச் செய்யப்படும்.