சர்வ வல்லமையுடன் வெற்றி பெற்று சீனாவுடன் கை கோர்க்கப் போகும் மஹிந்த…!! என்ன செய்யப் போகின்றது இந்தியா..?

இலங்கையில் ஆகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது.இதில், அத்தனை எதிர்க்கட்சிகளும் சிதறிக் கிடப்பதால் சர்வ வல்லமையுடன் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராவது உறுதியாகி இருக்கிறது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், அப்படி ராஜபக்ச மீண்டும் பிரதமராவதில் இந்தியாவுக்கு மிகப் பெரிய நெருக்கடிகள் காத்திருக்கின்றன என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

‘இலங்கையில் அரசாண்ட சுதந்திர கட்சியானது மரணப்படுக்கையில் இருக்கிறது. அப்படி ஒரு கட்சி இருப்பதற்கான சுவடே இல்லை.இத்தனைக்கும் இந்த கட்சியின் தற்போதைய தலைவராக இருப்பவர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உதறி தள்ளிவிட்டு மகிந்த ராஜபக்ச குடும்பமோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற முன்னணியை உருவாக்கி இருக்கிறது.ராஜபக்ச குடும்பத்தினரை தலைவர்களாக 100% ஏற்றுக் கொண்டவர்கள் நிறைந்தது இந்தக் கட்சி.அதிபர் நாற்காலியில் கோட்டாபயவை உட்கார வைத்தநிலையில் எந்த ஒரு நெருக்கடியிலும் சிக்காமல் தாங்கள் நினைத்த சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தை முழுமையாக செயல்படுத்த முனைப்புடன் களத்தில் இருக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி.களத்தில் வெற்றி காற்றும் இந்த திசையை நோக்கித்தான் இருக்கிறது.ஏனெனில், ராஜபக்சவை எதிர்க்கக் கூடிய ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுக் கிடக்கிறது.ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை கட்டமைத்திருக்கும் சஜித் பிரேமதாச தனி அணியாக இருக்கிறார்.மலையகத் தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த சிங்களர் கட்சிகளுடன் இணைந்திருப்பதால் அவர்கள் ஒன்றும் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கப் போவதும் இல்லை.கடந்த காலங்களில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் கொத்தாக குறிப்பிட்ட இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக கூட அமர்ந்து இருந்தார்கள்.அதனால், ஒருவித அனுசரணைப் போக்கை அரசு வெளிப்படுத்தி வந்தது.இப்போது அதற்கான இடமே இல்லை. தாங்கள் வைத்ததே சட்டம் என்ற நிலையை இயல்பாகவே தமிழர்களும் இஸ்லாமியர்களும் சிங்களருக்கு உருவாக்கி கொடுத்துவிட்டனர்.இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எந்த ஒன்றின் பெயராலும் இனிவரும் காலங்களில் இலங்கை அரசை நெருக்கடிக்குள்ளாக்கவும் முடியாது.மாறாக, தாம் விரும்பும் சீனாவுடனும் இன்னபிற நாடுகளுடன் அப்படித்தான் கைகோர்ப்போம்..நீ என்ன செய்வாய்..? என எகத்தாளமாக கேள்வி கேட்கும் ஆணவ அரசுதான் அமையும்.இது நிச்சயம் இந்தியாவுக்கு மிக மோசமான நெருக்கடியை தரக் கூடியதாகவும் அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.’ இவ்வாறு இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.