அலஸ்காவை இன்று அதிகாலை உலுப்பிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை..!!

அமெரிக்காவின் அலஸ்கா கடற்கரையில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (புதன்கிழமை) அதிகாலை அலஸ்காவின் பெர்ரிவில்லில் (Perryville) இருந்து 98 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்குப் பகுதியில் மையம்கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் ஆறு மைல் அல்லது 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் இது ஆழமற்ற நில அதிர்வாகப் பதிவாகியுள்ளது. 70 கிலோமீற்றருக்கு உட்பட ஆழத்தில் இடம்பெறும் நில அதிர்வுகள் ஆழமற்ற நிலநடுக்கமாகக் கருதப்படுகிறது.என்றாலும், ஆழமான நிலநடுக்கங்களுடன் ஒப்பிடும்போது ஆழமற்ற பூகம்பங்கள் பெரும்பாலும் அதிக சேதத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்தில் இந்த எச்சரிக்கை அமுலில் உள்ளது.இந்நிலையில், ஹவாய், வொஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.