பென் ஸ்டோக்ஸ் அபாரம்…இரண்டாவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத்தீவுகளை சுருட்டியது இங்கிலாந்து..!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்தது. மன்செஸ்டர்- ஒல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் 16ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 469 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 176 ஓட்டங்களையும், டொமினிக் சிப்ளி 120 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும், ரோச் 2 விக்கெட்டுகளையும், அல்சார்ரி ஜோசப் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதனைத் தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 287 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிரைஜ் பிரத்வெயிட் 75 ஓட்டங்களையும், ஷம்ரா புருக்ஸ் 68 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சேம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும், டொம் பெஸ் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதனைத் தொடர்ந்து 182 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகள் இழப்பு 129 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.இதனால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 312 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும், ஜோ ரூட் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில், கெமார் ரோச் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனையடுத்து. 312 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 198 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதில், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக, ஷமாரா புரூக்ஸ் 62 ஓட்டங்களையும், ஜெர்மைன் பிளக்வுட் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் 5 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், டொமினிக் பெஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சேம் கர்ரன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மொத்தமாக இரண்டு இன்னிங்சிலும் 254 ஓட்டங்களையும், மொத்தமாக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.இரு அணிகளுக்கிடையிலான தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி மன்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.