இந்திய அரசின் அனுமதியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐ.பி.எல்.?..

கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக இண்டியன் ப்றீமியர் லீக் (ஐபிஎல்) இருபது 20 கிரிக்கெட்டின் 13 ஆவது அத்தியாயம், ஐக்கிய இராச்சியத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.எனின், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2014 க்குப் பின்னர் மீண்டும் ஐக்கிய இராச்சியத்துக்கு நகரவுள்ளது. எவ்வாறாயினும் ஐபிஎல்லை இந்தியாவிலோ (மும்பை – புனே), ஐக்கிய அரவு இராச்சியத்திலோ (துபாய் – அபு தாபி – ஷார்ஜா) நடத்துவதாக இருந்தால் இந்திய அரசின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்.
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சவால்மிக்கது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சிறப்பு ஆலோசனைக் குழு நேற்று நடைபெற்ற விசேட மெய்நிகர்கூட்டத்தின்போது சுட்டிக்காட்டியது.எனினும் சிறப்பு ஆலோசனைக் குழு இது தொடர்பாக இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை. ஆனால், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சிரமமானது என நடத்தப்பட்ட கலந்துரையாடலின்மூலம் தெரிகின்றது. ஐபிஎல்லை நடத்துவதாக இருந்தால் சர்வதேச தராதரத்தைக் கொண்ட உயிரியல் சுகாதார நடைமுறை, சர்வதேச கிரிக்கெட் வீரர்களை இந்தியாவில் விமானம் மூலம் பயணிக்கச் செய்வது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது’ என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வட்டாரம் தெரிவித்தது.ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொவிட் – 19 கட்டுப்டுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு 56,422 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டனர். 357 இறப்புகளே பதிவாகியிருந்ததுடன் 48,488 பேர் குணமடைந்தனர். ஆனால், இந்தியாவில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன் 25,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
அத்துடன் டுபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மூன்று விளையாட்டரங்குகளும் போட்டிகளை நடத்துவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் கருதப்படுகின்றது.

சர்வதேச விமான நிலையம் பயணிகள் விமானங்கள் மாறும் பிரதான இடமாற்ற (ட்ரான்சிட்) இடமாக இருப்பதாலும் அடிக்கடி விமான சேவைகள் நடைபெறுவதாலும் இந்தியாவிலும் பார்க்க டுபாயில் சர்வதேச வீரர்களின் விமானப் பயணம் இலகுவாக இருக்கும்’ என அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.ஆனால், அவுஸ்திரேலியாவில் ஒக்டோபரிலும் நவம்பரிலும் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டால் மாத்திரமே ஐபிஎல் சாத்தியப்படும்.சர்வதேச கிரிக்கெட் பேரவை எதிர்வரும் திங்களன்று கூடும்போது இது குறித்த ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.எவ்வாறாயினும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டிவரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.’ஐபிஎல்லை மும்பையிலும் புனேயிலும் உள்ள நான்கு விளையாட்டரங்குகளில் நடத்துவது மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவது ஆகிய இரண்டு யோசனைகளும் முன்வைக்கப்படும். இந்திய அரசின் ஆலோசனையின் பிரகாரம் இறுதி முடிவு எடுக்கப்படும். இருபது 20 உலகக் கிண்ணத்தை ஐசிசி ஒத்திவைத்தால் ஐபிஎல் ஆளுநர் சபை கூடி ஐபிஎல் இறுதி முடிவு எடுக்கும்’ என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வட்டாம் மேலும் தெரிவித்தது.இதேவேளை, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் சிலர் கடந்த வாரம் தங்களுக்கு இடையே கலந்துரையாடியபோது, ஐபிஎல்லை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவது பிரச்சினையாக இருக்காது என தெரிவித்துள்ளனர்.ஐக்கிய அரபு இராச்சியமும் இப் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.