திட்டமிட்டு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மறைக்கின்றதா இலங்கை அரசாங்கம்..? தாதியர் தொழிற்சங்க செயற்பாட்டாளர் கடுமையான குற்றச்சாட்டு..!

அரசாங்கம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் தேவையான அளவுக்கு பரிசோதனைகளை நடத்துவதில்லை எனவும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் மற்றும் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி வெளியிடும் கருத்துக்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தாதியர் தொழிற்சங்க செயற்பாட்டாளருமான சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பல பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, நபர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களை திருட்டுத்தனமாக மூடி விட்டு, கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை மறைக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் ஒழிக்கப்படுமாயின் அதனை நாங்கள் மிகவும் விரும்புவோம். இதனை ஒழிக்க முடியுமா என்ற விடயம் சம்பந்தமான பிரச்சினை உள்ளது.ஒரு புறம் அரசாங்கம் பிரதேசங்களை மூடுகிறது. தேவையான அளவுக்கு பரிசோதனைகளை செய்வதில்லை. அத்துடன் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை. சுகாதார அமைச்சின் ஆலோசனைகளையும் பின்பற்றுதில்லை. அரசியல்வாதிகள் தமக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருகின்றனர்.சில கட்டுப்பாடுகளை அரசியல்வாதிகள் தாம் விரும்பியது போல் தளர்த்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் கூறியுள்ளார். இது செய்யக் கூடாத காரியம். மருந்தை கண்டுபிடித்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர இன்னும் ஒரு வருடமாவது செல்லும்.எனினும், விரைவில் ஊசி மருந்தை கண்டுபிடிக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கூறியிருந்தார். எதற்காக அப்படி கூறுகின்றார் என்பது எனக்கு தெரியவில்லை. எனினும் ஒரு வருடம் செல்லும் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் கூறுகிறார். அப்படியானால் இலங்கையின் பிரதிநிதி எப்படி இவ்வாறு கூற முடியும்.அதேவேளை உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கை இல்லை. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்தி சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை இருப்பதாக அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கூறுகிறார். இதிலும் முரண்பாடு உள்ளது.

பிரித்தானியா பயண கட்டுப்பாடுகளை நீக்கிய நாடுகள் பட்டியலில் இலங்கை இல்லை. அடுத்ததாக அமெரிக்க ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் இலங்கை உள்ளது. இதிலும் பரஸ்பர முரண்பாடுகள் உள்ளன.யார் இந்த முரண்பாட்டை தீர்ப்பது என்ற பிரச்சினை இருக்கின்றது. தயவு செய்து இதனை தெளிவுப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்கிறோம். இதனை தெளிவுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோருகிறோம். இலங்கை சரியாகஎந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். கடற்படையில் இருப்பது இளைஞர்கள்.எனினும், அவர்கள் இடையில் கொரோனா அதிகமாக பரவியது. இதனால்,இது சாதாரண விடயமல்ல எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.