தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

தபால் மூல வாக்களிப்புகள் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளதாகவும் வாக்களிப்பு வீதம் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றைய தினம் முற்பகல் 9 மணி முதல் 4 மணி வரை சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கடந்த 14 மற்றும் 15 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.அத்துடன் பாதுகாப்பு படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், மாவட்ட செயலகங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் நேற்றும் இன்றும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

வழங்கப்பட்ட தினங்களில் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் உள்ள தேர்தல் அலுவலங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொரொனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அதிகளவில் தபால் மூல வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளமை முக்கியமானதாக கருதப்படுகிறது.

இருப்பினும் மொனராகலை, காலி போன்ற இடங்களில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. வாக்கெடுப்பை புகைப்படம் எடுத்தல், வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியில் புள்ளடி இடப்பட்ட அட்டைகள் விநியோகிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.வாக்கெடுப்பு நிலையங்கள் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய அமைக்கப்பட்டிருந்தன. சில வாக்கெடுப்பு நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இருக்கவில்லை.இதேவேளை வாக்களிப்பு நிலைய பிரதிநிதிகளின் வருகை 75 வீதமான காணப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் 51 வீதமான பிரதிநிதிகளும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் 32 வீதமான பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.