இலங்கையில் இப்படியும் நடக்கின்றது….ஒரே நேரத்தில் இரு கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்..!!

இரத்தினபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இரண்டு கட்சிகளின் கீழ் தேர்தலில் போட்டியிடுவதாக அந்த மாவட்ட வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். தபால் திணைக்களம் நேற்றைய தினம் விநியோகித்த வாக்காளர்கள் அட்டைகளுடன் வழங்கப்பட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் விபரங்கள் அடங்கிய தூண்டு பிரசுரத்தில் அந்த வேட்பாளரின் பெயர் இரண்டு கட்சிகளில் இருப்பதை காண முடிந்துள்ளது.இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் 3 ஆம் இலக்கத்திலும் ஜனசெத பெரமுனவின் சார்பில் 2 ஆம் இலக்கத்திலும் ஒருவரே போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் இரண்டு கட்சிகளில் எப்படி போட்டியிட முடியும் எனவும் வேட்புமனு ஏன் நிராகரிக்கப்படவில்லை எனவும் வாக்காளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேடி அறிந்து, அவர் ஒரு வேட்பாளரா அல்லது இரண்டு பேரா என்பதை வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என வாக்காளர்கள் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணியான பானு முனிபிரிய, ஒரே நபர் இரண்டு கட்சிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்வது தவறான செயல் எனக் கூறியுள்ளார்.வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட போது எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டிருந்தால், இரண்டு வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட வாய்ப்பிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலாங்கொடையில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பிக்கு ஒருவரே இவ்வாறு இரண்டு கட்சிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக வாக்காளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.