கொரோனா உருவானது இத்தாலியில் தான்..!! நிரூபிக்கும் சீனத்து செய்தி ஊடகங்கள்!

மிலன் நகர பேராசிரியர் ஒருவரின் கருத்தை ஆதாராமாக கொண்டு, கொரோனா வைரஸ் முதன் முதலாக உருவான இடம் இத்தாலி என சீனத்து செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மொத்தமாக கட்டுக்குள் வந்த நிலையில், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் வலுவாக உள்ளதால், கொரோனா வைரஸ் பரவலின் பிறப்பிடம் சீனா- வுஹான் அல்ல ஐரோப்பிய நாடுகளே எனவும் அந்த ஊடகங்கள் பட்டியலிட்டுள்ளன. சமீபத்தில் மிலன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் Giuseppe Remuzzi தெரிவித்த கருத்தே இந்த களேபரங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

Giuseppe Remuzzi கூறுகையில், இத்தாலியில் நவம்பர் மாத துவக்கத்தில், அங்குள்ள மக்களுக்கு நிமோனியா பாதிப்பு அதிகமாக கண்டு வந்ததாக மருத்துவர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறியிருந்தார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெடித்துக் கிளம்பும் வரை இத்தாலியில் பல மாதங்கள் இந்த நோய் வட்டமிட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த விசித்திர நோயானது முதியவர்களை பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பேராசிரியர் Giuseppe Remuzzi-ன் கருத்துகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட சீனத்து ஊடகங்கள், தற்போது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் இத்தாலி எனவும் வுஹான் அல்ல எனவும் சாதித்து வருகிறது. வுஹானில் கொரோனா வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்னரே இத்தாலியில் பரவி இருக்கலாம் எனவும் பிரபலமான சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன ஊடகங்கள் பல பேராசிரியரின் கருத்துக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நிலையில், திங்களன்று Giuseppe Remuzzi அளித்த நேர்காணலில், இத்தாலியில் கண்டறியப்பட்ட காய்ச்சலுக்கும் கொரோனா வியாதிக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை எவரும் நிரூபிக்கபடவில்லை.

இத்தாலியில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பதற்கு ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வியாதியை அடையாளம் காணும் முன்னரே அது எவ்வாறு அதி வேகமாக பரவியது என்பதையே தாம் சுட்டிக்காட்டியதாகவும், அல்லாது அது உருவான இடத்தையல்ல எனவும் விளக்கமளித்துள்ளார்.