ஆறு கிரகச் சேர்க்கையில் ஆரம்பித்த கொரோனா எப்போது மறையும்..? ஜோதிடம் சொல்வது என்ன..?

2019 டிசம்பரிலேயே தொடங்கிவிட்ட கொரோனா வைரஸ், மே முதல் வாரத்திலிருந்து மட்டுப்படத் தொடங்கும் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.கொரோனா விஷயத்தில் உலகமே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போதுள்ள நிலைமை பற்றி ஜோதிட சிரோன்மணி தேவி தெரிவிக்கும் கணிப்புகள் இவை: ஜோதிடத்தில் கொரோனாவின் தாக்கம் பற்றி ஆராயும்பொழுது பல வெளிப்பாடுகள் தென்படுகின்றன. இந்த வைரஸ் தாக்கம் என்பது சீனாவில் இருந்து வந்து அண்டை சராசரங்களில் வியாபித்துள்ளது. இவற்றின் தாக்கம் எப்பொழுது துவங்கியது என்று பார்த்தால் 2019 டிசம்பர் மாதமே அரங்கேறிவிட்டது.

ஆறு கிரக சேர்க்கை என்ற செயலுக்குச் சில நாள்களுக்கு முன்பே இந்த வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்து விட்டது. இது மறைக்கப்பட்ட உண்மை.2020 ஜனவரி மாதம் பிறந்தவுடனேயே காலபுருஷ தத்துவப்படி காற்று ராசியான மிதுனத்தில் ராகுவோடு கூடி பன்மடங்காகப் பெருக்கி காற்றில் பரவச்செய்ய துவங்கியது. ராகுவானவர் வைரஸின் காரகத்துவம் கொண்டவர். அதுவும் அஷ்டமத்தில் உள்ள செவ்வாயின் பார்வை – ராகு பன்மடங்கு பலம் அடைய செய்வார். ராகுவானவர் சமசப்தம பார்வையில், வருட கிரங்களான குரு, சனி, கேது மற்றும் மாத கிரகங்களான சூரியன், புதன், சனி உடன் சேர்ந்து 9-ல் பார்வை இடுகிறார். ஒன்பதாம் பாவம் என்பது கர்மாவின் கழிவினைச் செயல்கள், அயல்நாடு மற்றும் சட்டபூர்வமான செயல்கள் (குரு, புதன் ) சொல்லும் இடம்.இது தவிர ராகுவானவர் ராகுவின் சாரத்தில் இருந்து கொடூர அம்புகளால் விமான பயணிகள் வாயிலாக மற்றும் காற்றின் மூலம் பரவச் செய்தார். ரத்தகாரகன் செவ்வாயானவர் ஜனவரி மாதம் சனியின் சாரத்தில் அதாவது அனுஷ நட்சத்திரத்திலிருந்து பிரச்னையைத் தீவிரப்படுத்தினார். சனி கேது என்பது சந்நியாச யோகம் என்ற செயலைச் செய்ய வைக்கும். நோயின் தாக்கத்தால் தனிமைப்படுத்தும், அதாவது ஐசொலேஷன் – isolation முறையைச் செயல்படுத்தும்.

பெப்ரவரி 8 முதல் செவ்வாயானவர் இன்னும் மோசமான நிலையில் தனுசுவில் சஞ்சாரம் செய்யப்பட்டார். மற்ற பலம் பெற்ற கிரகங்களோடு அதாவது குரு, கேதுவுடன் சேர்ந்து இன்னும் மோசமான நிலையில் மக்களுக்கு ஒரு பீதியை ஏற்படுத்தினார். அதேவேளை செவ்வாய், மார்ச் 22-ல் (22.3.2020-ல்) தனுசிலிருந்து மகரம் சென்றால் காப்பாற்றப்படுவாரா என்று பார்க்கலாம்.பஞ்ச மகா புருஷ யோகம் ருச்ச யோகம் கொண்டு செவ்வாய் செயற்படுவார். எல்லா பாவங்களிலும் குருவானவர் இருந்து இந்தத் தாக்கத்திற்கு ஒரு விடியலை காட்டுவார். குரு ஒரு வழிகாட்டியாக இருந்து உலக நாடுகள் வாயிலாகத் தீர்மானம் எடுக்கச் செய்வார்கள் மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்க வழிவகுப்பார்கள். ஆனால், மகரத்தில் செவ்வாய் உச்ச நிலையில் சனியுடைய தாக்கம் வெவ்வேறு பிரச்னைகளை அதிகமாக்குவர். இந்த இடம் கர்மகாரகன் சனி வீடு இங்கு மனித குல கர்மாவை அனுபவிக்கும் இடமாகும்.

இந்த செவ்வாய் இருக்கும் நட்சத்திர கால் சூரியன் (உத்திராடம்) அவர் மட்டும் அல்ல குருவும் சனியும் உத்தரத்தில் தற்பொழுது சஞ்சாரம் செய்கிறார்கள் (23.3.2020 ). இவற்றில் சூடு என்பது இன்னும் அதிகம் பரவலாகச் சுட்டெரிக்கும். செவ்வாயானவர் சனியோடு சேர்க்கை பெறுவது உலக நாட்டிற்கு நல்லதல்ல. எப்பொழுதும் இந்த செவ்வாய், சனி சேர்க்கை, தனுசுவில் அசுபர்கள் சஞ்சாரம் செய்யும்பொழுதுதான் உலகை உலுக்கும் செயல்கள் அரங்கேறும்.

ஒருவழியாக மே முதல் வாரம் துவக்கத்திலிருந்து செவ்வாயானவர் கும்பத்திற்குச் செல்லும்பொழுது படிப்படியாக இந்த வைரஸ் குறையத் தொடங்கும், மற்றும் உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.பரிகாரம் : கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம் வரிகளைச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும். உலக நன்மைகளுக்காக வக்ரகாளி அம்மன், ஸ்ரீ சரபேஸ்வரர், சண்டி, பிரத்தியங்கிரா தேவி, உக்ர நரசிம்மர், வராஹி தெய்வங்களை வணங்கி வழிபட வேண்டும். முடிந்தவரை நம் முன்னோர்கள் சொன்ன இந்தியப் பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நம் நாட்டிற்கு ஏற்ற, தட்பவெப்பத்திற்கு ஏற்ற, உணவு முறைகளைச் சாப்பிட வேண்டும்.கொரோனா வைரஸ் சூழலை மிகுந்த தெய்வ நம்பிக்கையுடன், தகுந்த எச்சரிக்கையுடன் எதிர்கொண்டு தவிர்க்க வேண்டும்.