சாக்கு கட்டிலில் ஓய்வெடுக்க வேண்டிய சம்பந்தன் தள்ளாடும் வயதிலும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி!

தமிழர்களின் அடையாளங்கள் பறிபோவதைத் தடுத்து நிறுத்த சம்பந்தனால் ஒருபோதும் முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.அம்பாறை மாவட்டத்தில் மக்கள் எங்களுடன் அணிதிரண்டுள்ளார்கள். தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க மக்கள் எம்மோடு இணைந்துள்ளார்கள். இதனால், திறம்பட நாடாளுமன்ற அதிகாரத்தின் பின் எதிர்கால அரசியலை முன்னெடுப்போம்.கோட்டாபய, மஹிந்த அரசாங்கம் இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும். இதனால் தனித்துவமாக களமிறங்கி தேர்தலின் பின் உறுதியான பேச்சுவார்த்தையின் பின் அரசுடன் கைகோர்ப்போம். திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் நில அபகரிப்பு, தொல் பொருள் என்ற போர்வையில் வணக்கஸ்தலங்கள் அபகரிப்பு என்பன காணப்படுகிறன.இதனை உடன் தீர்வு காண தமிழ் மக்கள் எம்மோடு இணைய வேண்டும். கடந்த கால ரணில் அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், எதையும் தமிழ் மக்களுக்காக செய்யவில்லை. இதனை மக்கள் உணர வேண்டும்.மாற்றத்துக்கான சக்தியாக இந்த தேர்தலை வெற்றி கொள்ள களமிறங்கியுள்ளோம். கிழக்கு மக்களின் இருப்பையும் பாரிய அபிவிருத்தியையும் காணக்கூடிய அரசாங்கமாக கோட்டாபய உள்ளார். இதற்காக நாம் செயற்பட வேண்டும். 12,800 போராளிகள் அன்றைய அரசில் எவ்வித வழக்குகளுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

அது போன்று 150 அரசியல் கைதிகள் உள்ளார்கள். இவர்களை விடுவிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் உடன்படிக்கை செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலின் பின் தொடர்ந்தும் அரசுடன் விடுதலை தொடர்பிலும் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்போம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகளை வைத்து நாடகமாடுகிறது. எந்த வித தீர்மானமும் இல்லை. சம்மந்தன் ஐயா ரணில் அரசாங்கத்துக்கு கடந்த காலத்தில் வெறுமனே, ரணிலுக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றினார். தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் இல்லை.

பொதுஜன பெரமுன கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, அதில் உறுப்பினரும் இல்லை. தேர்தல் அதிகாரத்தின் பின் அரசுடன் இணைவோம். கோட்டாபயவின் உடன்படிக்கை உள்ளது, பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கைகளை செய்வோம். தனித்துவ வெற்றியின் பின் அழுத்தமாக செயற்படுவோம்.இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் திருகோணமலையில் களமிறக்கப்பட்டுள்ளார்கள். வீட்டுக்கு வாக்களித்து வாக்களித்து வீடு வாசல்களே அழிந்து போய் உள்ளது.

சம்மந்தன் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் தள்ளாடும் வயதில் அதிகாரத்தை பெற முயற்சிக்கிறார். நல்லதொரு தலைவராக இருந்தால் இளைஞர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு சாக்கு கட்டிலில் ஓய்வெடுத்திருக்க வேண்டும்.திருகோணமலை வரலாற்றுமிக்க கோணேஸ்வரத்திற்கு சென்ற மதகுரு அதனை தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றார். இதனை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பால் முடியாது. அராஜக அரசியலை விட்டு மக்கள் எம்மோடு இணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.