கொரோனாவிற்கு மத்தியிலும் டெஸ்ட் கிரிக்கெட்…சொந்த மண்ணில் பலம்வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்திவுகள் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று, சொந்த மண்ணில் இங்கிலாந்தை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.இங்கிலாந்து சுற்றுப் பயண் மேற்கொண்டுள்ள ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி கடந்த 08 ஆம் திகதி சவுத்தாம்டனில் ஆரம்பமானது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204, ஓட்டங்களையும் மேற்கிந்தியத்தீவுகள் 318 ஓட்டங்களையும் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 2 ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 284/8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.போட்டியின் ஐந்தாவதும் மற்றும் இறுதி நாளான நேற்றைய தினம் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 313 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இங்கிலாந்து அணி சார்பில் ஜாக் கிராலி 76 ஓட்டங்களையும், டொமினிக் சிப்லி 50 ஓட்டங்களையும், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களையும், றோரி பெர்ன்ஸ் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கேப்ரியல் 5 விக்கெட்டுக்களையும், ரோஸ்டன் சேஸ் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தால இவ்விரு விக்கெட்டுக்களையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேம்ப்பெல் ஓட்டத்துடன் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆனார். ஆர்ச்சர் ‘வேகத்தில்’ பிராத்வைட் (4), ஷமர் புரூக்ஸ் (0) அவுட்டாகினர். ஷாய் ஹோப் (9) நிலைக்கவில்லை.பின்னர் இணைந்த ராஸ்டன் சேஸ், ஜெர்மைன் பிளாக்வுட் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. நான்காவது விக்கெட்டுக்கு 73 ஓட்டங்கள் சேர்த்த போது ஆர்ச்சர் பந்தில் சேஸ் (37) ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய பிளாக்வுட், ஆண்டர்சன் பந்தில் நான்கு ஓட்டத்தை அனுப்பி அரைசதம் கடந்தார். ஸ்டோக்ஸ் பந்தில் டவ்ரிச் (20) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய பிளாக்வுட் 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.மீண்டும் களமிறங்கிய ஜான் கேம்ப்பெல், ஸ்டொக்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.ஜேசன் ஹோல்டர் (14), ஜான் கேம்ப்பெல் (8) ஆட்டமிழக்காதிருந்தனர்.இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 3, ஸ்டொக்ஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 1–0 என, முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் ஷனான் கேப்ரியல் வென்றார்.இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.