காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள்.!! உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சித் தகவல்..!

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் பரவுவது குறித்த வழிகாட்டலை புதுப்பிக்குமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்த அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வன் கெர்கோவ், காற்று வழியாகவும் கொரோனா பரவுவதற்கான சாத்தியத்தையும் தற்போது விவாதத்திற்கு ஏற்று இருப்பதாக தெரிவித்தார்.

கொரோனாத் தொற்று பரவல் குறித்து, 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கடிதத்தை உலக சுகாதார அமைப்புக்கு எழுதியுள்ளனர். இதில்,கொரோனா காற்று வழியாகப் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களை காட்டியுள்ளனர்.இவர்கள் கோரியபடி உலக சுகாதார ஸ்தாபனம் காற்று வழியாகவும் கொரோனா பரவுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் உலகம் முழுவதும் ஓரடி சமூக இடைவெளி என்ற நிலைமையை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கங்களுக்கு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மூக்கு மற்றும் வாய்வழியாக உதிரும் நீர்த்துளிகளால் மட்டும் கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த காலத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் காற்றில் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து ஆதாரம் இல்லை என்றும் அந்த அமைப்பின் மூத்த விஞ்ஞானிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை உலகளவில் 11.9 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கிட்டத்தட்ட 540,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.