தெற்கில் பேசுவது ஒன்று வடக்கில் இன்னுமொன்று…தேர்தலில் வெற்றி பெற மாஸ்ரர் பிளான் போடும் மொட்டு.!!

தென்பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள், வடக்கில் மக்களை ஏமாற்ற வேறு சின்னங்களில் போட்டியிடுகிறார்கள் என குற்றம் சுமத்தியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பா.கஜதீபன். வடமராட்சி வியாபாரி மூலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன் பங்குபற்றிய தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் உரையாற்றியபோதே கஜதீபன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது;

இரண்டு நாட்களின் முன்னர் பிரதமர் அலரி மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சுட்டிக்காட்டி, இவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். அத்துடன், எமது கட்சியை சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள், அவர்களிற்கும் வாக்களிக்க வேண்டுமென்றார்.யாழ்ப்பாணத்தில் மிக நீளமான வாக்குச்சீட்டு உள்ளது. இதில் நீங்கள் எங்கு தேடினாலும் மஹிந்த ராஜபக்சவின் கட்சியையோ சின்னத்தையோ காண முடியாது. ஆனால், அவரது அமைச்சரவையிலுள்ள வாசுதேவ நாணயக்காரவின் கட்சி போட்டியிடுகிறது. பெரமுன கூட்டணியிலுள்ள திஸ்ஸ விதாரணவின் கட்சி இங்கு போட்டியிடுகிறது. பொலன்னறுவ மாவட்டத்தில் பெரமுனவில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் கட்சி, இங்கு வேறு சின்னத்தில் போட்டியிடுகிறது.இங்கு அங்கஜன் இராமநாதன் போட்டியிடுகிறார். கிளிநொச்சி மாவட்டத்தில் சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

ஒரே தரப்பை சேர்ந்தவர்கள் 5 கட்சிகளாக போட்டியிடுகிறார்கள். மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதால், வேறுவேறு சின்னங்களில் போட்டியிடுகிறார்கள்.ஒவ்வொருவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருப்பார்கள். என்ன மாதிரியானவர்களாக இருந்தாலும், அவர்களிற்கு நண்பர்கள் இருப்பார்கள். தெரிந்தவர்கள் என அவர்களிற்கு வாக்கு போடுவார்கள். தமிழ் மக்களின் வாக்கை உடைப்பதற்கு இப்படியான உத்தியை பாவிக்கிறார்கள்.சஜித் அணி இந்த போட்டியிலேயே இல்லை. தென்னிலங்கையில் மிகப்பலவீனமாக உள்ளனர். இங்கு வந்து சஜித் நிறைய வாக்குறுதிகள் வழங்குகிறார்கள்.சில தமிழ் இளைஞர்கள் கேட்கிறார்கள், உங்களிற்கு ஏன் வாக்களிக்க வேண்டுமென. சிங்கள கட்சிகளிற்குத்தானே வாக்களிக்க கூடாது, அவர்களை ஒரு பக்கம் ஒதுக்கி விடலாம். ஏனைய தமிழ்கட்சிகள் உள்ளனதானே என்கிறார்கள். வடக்கு கிழக்கில் தமிழர் தரப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பே பலமானது. கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மாவட்டங்களில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் தரப்புக்கள் போட்டியிடுகின்றன. அங்கு அவர்கள் 50, 100 வாக்குகளைத்தான் பெறுவார்கள். அங்கு வாக்கு சிதறினால், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகலாம்.

வன்னி தேர்தல் களத்திலும் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஒருமுறை சிவசிதம்பரம் எம்.பியாக இருந்தார்.அதை தவிர, வேறு யாரும் ஆதிக்கம் செலுத்தவில்லை.யாழ்ப்பாணம், கிளிநொச்சியில்தான் எல்லோரும் அரசியல் செய்கிறார்கள். ஒரு நாடாளுமன்ற ஆசனத்தையாவது பெற்றுவிட வேண்டுமென வேலை செய்கிறார்கள்.ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் போட்டியிட வேண்டும். பல தரப்பும் தெரிவாக வேண்டுமென்பது உண்மை. 1970களில் நாடாளுமன்ற ஜனநாயகம் மிக ஆரோக்கியமாக இருந்தது. அப்படியான நிலைமையில், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வீடு தேடிச் சென்ற தந்தை செல்வா, நாங்கள் ஒன்றுபட வேண்டுமென கேட்டு, தமிழர் விடுதலை கூட்டணி உருவானது.அன்றைக்கு இருந்த சூழலை விட நாங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டியதற்கான தேவை இன்று அதிகமாக உள்ளது.

கிழக்கில், வன்னியில் மாற்று கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றும் நிலைமை இல்லாத போதும், ஒற்றுமையை விரும்புகிறார்கள் மத்தியில், யாழில் மாத்திரம் ஒரு ஆசனம் சில வேளைகளில் வெளியில் சென்றுவிடுமோ என்ற அச்சம் உள்ளது.சம்பந்தன் ஐயா 20 ஆசனங்கள் வெல்லலாமென கூறுகிறார். இது எனது தனிப்பட்ட கருத்து அதற்கு வாய்ப்பு மிகக்குறைவு.ஆனால், நாங்கள் 16 ஆசனங்களையாவது நிச்சயம் வெல்லலாம். நாங்கள் 16 ஆசனங்களை பெற்றபொது, ஒரு தரப்பு 1 ஆசனத்தை பெற்றால், அது மாற்று தலைமையாக இருக்க முடியாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பா.கஜதீபன் மேலும் தெரிவித்துள்ளார்.