ஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்!!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2011 ஆம் ஆண்டு இறுதி போட்டியை இலங்கை , இந்தியாவிடம் பணத்திற்காக காட்டிக்கொடுத்ததாக அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக, கிரிக்கெட் வீரர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான இணையத்தளம் கிரிக் இன்போ தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு கிரிக்கெட் வீரர்கள், விசாரணை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க தயாராகி வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன, முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோர் இந்த விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இந்த விடயங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளை அடுத்து, விசாரணைகளை நடத்திய விளையாட்டு மோசடிகளை விசாரிக்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு, போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டமைக்கான தகவல்கள் இல்லை எனக் கூறி, கடந்த 3 ஆம் திகதி விசாரணைகளை நிறைவு செய்தது.இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விளையாட்டுத் தொடர்பான சட்டத்திற்கு அமைய பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.