இந்தியாவில் கோரத் தாண்டவமாடும் கொரோனா!! 7 லட்சத்தைக் கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை.!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தையும் கடந்துள்ளதுடன் அதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

அதன்படி இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 719,664 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,159 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 439,934 ஆகவும் பதிவாகியுள்ளது.தற்போது உலகிலேயே அதிக கோவிட் தொற்றாளர்களை கொண்ட இரு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரேஸிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வெறும் நான்கு நாட்களில் 6 இலட்சத்திலிருந்து 7 இலட்சமாக உயர்வடைந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாட்டிற்கு பிறகு டெல்லி ஒரு இலட்சம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை பதிவு செய்த மூன்றாவது மாநிலமாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது இரண்டு இலட்சத்திற்கு அதிகமான கொரோனா தொற்றாளர்களும், தமிழ்கத்தில் 1.11 இலட்சம் கொரோனா தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.இதற்கிடையில், இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான இரண்டு சாத்தியமான தடுப்பூசிகள் உள்ளன, அவை மனித சோதனைகளுக்கு தயாராக உள்ளன. அதன்படி பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இணைந்து செயல்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலக்கெடுவை நிர்ணயித்ததற்காக ஐ.சி.எம்.ஆர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.ஆகஸ்ட் 15 க்கு முன்னர் தடுப்பூசி தொடங்குவதற்கான கோவாக்சின் சோதனைகளை விரைவுபடுத்த ஐ.சி.எம்.ஆர் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11,622,741 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 538,079 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,302,689 ஆகவும் பதிவாகியுள்ளது.