கொரோனாவால் ஏற்பட்ட பிரிவு….தாதிய தாய்க்கும் 3 வயது மகளுக்கும் நடந்த பாசப் போராட்டம்..!! கண்ணீர் விட்டு அழுத வைத்தியசாலைப் பணியாளர்கள்…!

தாதியாக பணியாற்றும் தாய்க்கும் அவரது மூன்று வயது மகளுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம் அவர்களை மட்டுமல்லாது வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் சக பணியாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளிகளை பராமரிக்க தனிவிடுதி அமைக்கப்பட்டு அங்கு மருத்துவர்களும் தாதியர்களும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.இதனால் அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் கடந்த 15 நாட்களாக வைத்தியசாலையிலேயே தங்கியுள்ளனர்.

இவ்வாறே பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தைச் சேர்ந்த சுனந்தா(வயது 31 ) என்ற தாதியும் வீடு திரும்ப முடியாமல் வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்றார்.இவ்வாறு அவர் வீடு திரும்பாததால், தனது மூன்று வயது மகளைக்கூட பார்க்க முடியவில்லை.எனினும், மகள் ஐஸ்வர்யா தாயை பார்க்க வேண்டும் என கதறி அழுததால் தந்தை அவரை அழைத்துக் கொண்டு தாய் பணியாற்றும் வைத்தியசாலைக்கு வந்தார்.இது தொடர்பில் சுனந்தாவுக்கும் கணவர் தெரியப்படுத்தியிருந்தார்.அவர் கொரோனா தனி விடுதியில் பணியாற்றுவதால் மருத்துவ பாதுகாப்பு கருதி குழந்தையின் அருகே வர முடியாத தூரத்திலேயே நின்று கொண்டார்.

சுனந்தாவைப் பார்த்ததும் குழந்தை ஐஸ்வர்யா ‘அம்மா….. அம்மா… வாம்மா போகலாம் என கதறி அழுதுள்ளது.தனது குழந்தை அழுவதைப் பாரத்ததும் நீண்ட நாட்களுக்கு பின்னர் குழந்தையை பார்த்ததும் தன்னால் அவளை தூக்கி கொஞ்ச முடியவில்லையே, என்ற ஏக்கத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.குழந்தை அம்மாவிடம் செல்வதற்கு முயற்சி செய்தது.ஆகால் தந்தையோ அவளை தாயிடம் செல்ல விடாமல் தடுத்தார்.இதனால் தாய் மகள் இருவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.இதனைப்பார்த்த வைத்தியசாலைப்பணியாளர்களும் மனமுடைந்து அவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.