பசுமாட்டின் நஞ்சுக்கொடியை ஆலமரத்தில் கட்டிவைப்பது ஏன் தெரியுமா..? திகைக்க வைக்கும் உண்மை!

பல நாட்களாக ஒரு சந்தேகம், என்னவென்றால் பசு மாட்டின் நஞ்சு குடல் இருக்கும் அல்லவா? அதனை ஆலமர விழுதில் கட்டி தொங்கவிடுவார்கள். சிறுவயதில் தூரத்தில் இருந்தே பார்த்ததால், இது குறித்து சந்தேகம் மட்டுமே இருந்தது. இவர்கள் எதற்காக ஆலமரத்தில் கட்டுகிறார்கள் என ஆராய எண்ணவில்லை.


சமீபத்தில் ஊர் பக்கம் சென்றபோது மீண்டும் அதே காட்சி. பெரியவர் ஒருவர் மரத்தில் மாட்டின் நஞ்சுக்கொடியை கட்டிக்கொண்டு இருக்க, ஏன் கட்டுகிறீர்கள் என கேட்டேன். அவரோ மாட்டிற்கு பால் நன்றாக சுரக்க வேண்டும் என்பதற்காக கட்டுகிறோம் என கூறினார்.

அந்த பதில் அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது, ஒப்புக்கொள்ளும்படி இல்லை. மீண்டும் ஊரில் உள்ள சிலரிடம் இது குறித்து வினாவிய போது பதில் கிடைத்தாயிற்று. அதாவது நஞ்சுக்கொடியின் வாடைக்கு துஷ்ட, ஆபத்து விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் விலங்குகள் வரக்கூடும்.

என்னதான் நிலத்தில் புதைத்தாலும் விலங்குகள் மண்ணை கிளறி எடுத்துவிடக்கூடும். இந்த வாடையை மோப்பம் பிடித்துக்கொண்டு மாட்டிற்கு எந்த தீங்கும் விளைவித்துவிட கூடாது என்பதற்காகவே, ஆலமரத்தின் விழுதில் கட்டி தொங்க விடுகிறார்கள். சில நாட்களில் நஞ்சு கொடி காய்ந்து விடும்.

அது ஏன் ஆலமரம்? என்ற சந்தேகமும் எழுந்து கேள்வி எழுப்பிய போது, ஆலமரம் என்பது ஊருக்கு பொதுவெளியில் இருக்கும். வீட்டில் வளர்க்கும் மரமல்ல. விலங்குகள் தூரத்தில் உள்ள இந்த மரத்தில் இந்த வாடையை மோப்பம் பிடித்து வருவது சாத்தியமில்லை. இதனால் மாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. சரி, நஞ்சுக்கொடியை மரத்தில் கட்டினால் தான் மாடு அதிக பால் கொடுக்கும் என ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? ஏதாவது லாபம் என்று சொன்னால் தானே நாம மெனக்கெட்டு ஊருக்கு வெளியில் உள்ள மரத்தை கண்டுபிடித்து, நஞ்சு கொடியை கட்டுவோம். அதனால் தான்!

ஆனால் சிலர் இந்த நஞ்சுக்கொடியை பாலீத்தின் கவர் கொண்டு கட்டிவிடுகிறார்கள். இயற்கைக்கு நேரான செயலிலும் அதற்கு மாறாக ஒரு செயல். இதற்கு பதில் வைக்கோலை வைத்து கட்டுவிடலாமே? இங்கேயும் பிளாஸ்டிக்கா?