கொழும்பு புறநகரில் திடீர் சுற்றி வளைப்பு..! பெருமளவு வெடிமருந்துகள் ஆயுதங்கள் மீட்பு..!! பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹோமகமவில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

பிட்டிப்பன வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணிடம் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய ஹோமாகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அந்த வீட்டில் இரகசிய அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் உட்பட வெடி பொருட்களும் 7 கைக்குண்டுகளும், குண்டு துளைக்காத ஆடைகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பெண் அந்தப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 5 மாடி கட்டடத்தின் உரிமையாளரின் சட்டவிரோத மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவரால் 50 இலட்சம் ரூபாய் விலைக்கு 2013ஆம் ஆண்டு குறித்த வீடு கொள்வனவு செய்து அங்கு குடியேறியுள்ளார்.திருமணம் செய்யாத அந்த பெண் தனது சகோதரியின் பிள்ளைகள் இருவருடன் குறித்த வீட்டில் தங்கியிருந்துள்ளார்.எப்படியிருப்பினும், குறித்த ஆயதங்கள் தொடர்பில் தனக்கு ஒன்றும் தெரியாதென சந்தேகநபரான பெண் தெரிவித்துள்ளார். இந்த வீட்டை குறித்த பெண் கொள்வனவு செய்வதற்கு முன்னரே அங்கு ஒரு பாதுகாப்பு அறையில் இந்த ஆயுத்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.