குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவதற்கு ஏற்ற அற்புதமான பானம்..!!

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் “கொஞ்சமாக கொடுங்கள்” என்பார்கள், சிலர் “எல்லாமே கொடுக்கலாம்” என்பார்கள். ‘கொஞ்சமாக’ என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.