யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை!

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வுகூடப் பரிசோதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும், “கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வுகூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பி.சி.ஆர். இயந்திரத்தை இயக்குவதற்குப் போதிய ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எனவே வரும் புதன்கிழமை இந்தப் பரிசோதனைகளை அங்கு செய்ய முடியும் என்று நம்புகின்றேன்” என்று தெரிவித்தார்.இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலையில், அவற்றை இயக்கும் ஆளணி மற்றும் தொடர்புடைய பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.