2011 கிரிக்கெட் உலகக்கிண்ண ஆட்டநிர்ணயம் தொடர்பில் சிறப்பு பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பம்..!!

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த உலகக் கிண்ண போட்டித் தொடர் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணைப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் பொன்சேகாவின் ஆலோசனைக்கு அமைய கிரிக்கட் சபையின் தலைமையகத்துக்கு சென்ற சிறப்புக் குழு இந்த ஆவணங்களைப் பொறுப்பேற்றுள்ளது.

2011 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்ற அணி விபரம், அதிகாரிகள் விபரம், தேர்வுக் குழு விபரம், இறுதிப் போட்டிக்காக விஷேடமாக இலங்கையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட வீரர்கள் விபரம் உள்ளிட்ட ஆவணங்களே இவ்வாறு தமது பொறுப்பில் எடுக்கப்பட்டதாக விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் பொன்சேகா தெரிவித்தார்.இந்நிலையில், குறித்த போட்டித் தொடரில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் தமது விசாரணைப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்த தீர்மனைத்துள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக குறித்த போட்டித் தொடரின் போது தேர்வுக் குழு தலைவராக இருந்த முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வாவை விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த விசாரணைகள் இந்தவாரத்துக்குள் இடம்பெறும் எனவும், விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு அரவிந்த டி சில்வாவுக்கு அறிவித்தல் அனுப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.இந்த விவகாரத்தில் ஏற்கனவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டன.

கடந்த 24 ஆம் திகதி இந்த விசாரணைகள் இடம்பெற்றன. அன்றைய தினம் காலை 6.30 மணியளவில், நாவலப்பிட்டிக்கு சென்ற விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான நால்வர் கொண்ட குழு, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் நீதிமன்றத்தில் வைத்து முற்பகல் 9.30 மணி வரை சுமார் 3 மணி நேர ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து, விஷேட வாக்கு மூலம் ஒன்றினையும் பதிவு செய்துகொண்டுள்ளது. இந்நிலையில் அந்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள், விசாரணைகளின் போது கையேற்கப்பட்ட சில ஆவணங்களை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அம்பலப்படுத்தியிருந்தார்.இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணைப் பிரிவில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் முறைப்பாடு செய்தார்.இந்த முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்கின்றது.

இதுவரை விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் 20 இற்கும் அதிகமான ஆவணங்களை பொறுப்பேற்று கொழும்பில் உள்ள விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணைப் பிரிவின் தலமையகத்துக்கு எடுத்துவந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே, குறித்த 2011 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகளின் வாக்கு மூலங்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க விளையாட்டுகளுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் இடம்பெற்றுள்ளனவா என முதல்கட்டமாக ஆராயப்பட்டு வருவதாக விசாரணைத் தகவல்கள் தெரிவித்தன.