அழகு கலை மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் தொடர்பில் கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

அரசாங்கத்தின் தேவையற்ற தலையீடுகள் சிறிய அளவிலான வர்த்தகங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் அவற்றின் வசதிகள் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி போன்றவற்றுக்கு உதவுவது அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


அழகு கலை மற்றும் சிகையலங்கார கலைஞர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அழகு கலை மற்றும் சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில் நிபுணத்துவத்தை முன்னேற்றுதல், நிதி வசதிகளை வழங்குதல் மற்றும் வணிக ரீதியிலான ஊக்குவிப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

நாடு முழுவதும் சிறிய , நடுத்தர மற்றும் பெரியளவிலான சுமார் 90 ஆயிரம் அழகு மற்றும் சிகையலங்கார நிலையங்கள் இருப்பதாக இந்த கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. சுமார் நான்கு லட்சம் பேர் இந்த துறையில் தொழில் புரிந்து வருகின்றனர் என்பதுடன் 15 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன.இவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காது அவர்களின் தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகள் பங்களிப்பு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.