பத்துக் கோடி ரூபா பெறுமதியில் பாகிஸ்தான் தலைநகரில் கட்டப்படும் மிகப் பெரிய இந்துக் கோயில்..!!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதன்முதலாக இந்துக் கோயில் கட்டப்படுகிறது. இஸ்லாமாபாத்தின் H-9 என்ற பகுதியில் 20 ஆயிரம் சதுர அடியில் கட்டப்படும் இந்த கிருஷ்ணர் கோயில், இந்திய ரூபாயில் 10 கோடி பெறுமதியில் அமைக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தக் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மால்ஹி நாட்டி தொடங்கிவைத்தார்.இதன்போது, கடந்த 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் இஸ்லாமாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவான இந்துக் கோயில்கள் இருந்ததாகவும், இந்து பக்தர்கள் தொகை குறைந்ததன் காணரமாக காலப் போக்கில் கோயில்கள் இல்லாமல் போய்விட்டதாகவும் மால்ஹி தெரிவித்துள்ளார்.மேலும், கடந்த 20 ஆண்டுகளில் இஸ்லாமாபாத் நகரில் இந்துக்களின் எண்ணிக்கையில் கணிசமாக அதிகரிப்பு காணப்படுவதால், அவர்கள் வழிபடும் வகையில் இந்துக் கோயில் தேவைப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கோயில் கட்டுவதற்கான செலவை பாகிஸ்தான் அரசே ஏற்கும் என அந்நாட்டு மத விவகாரங்களுக்கான அமைச்சர் பீர் நூருல் தெரிவித்துள்ளார்.மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்து அமைப்பினர் குறித்த கோயிலுக்கு ‘ஸ்ரீ கிருஷ்ணா மந்திர்’ என பெயர் சூட்டியுள்ளதாகவும் 2017ஆம் ஆண்டிலேயே கோயில் கட்டுவதற்கு மனையை ஒதுக்கி தலைநகர் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கோயில் கட்டுவதற்கான சிறப்பு மானியம் ஒதுக்குவது குறித்து பிரதமர் இம்ரான்கானுடன் கலந்துரையாடியதாகவும் மத விவகார அமைச்சின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.