கொரோனாவை தொடர்ந்து மீள ஆரம்பமாகும் பாடசாலைகள்…யாழ் நகரப் பாடசாலைகளில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்..!

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில், பாடசாலை வளாகத்தில் கிருமி தொற்று நீக்கல் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் இந்த பணி யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.அதன்படி வரும் 29ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைக்குத் திரும்பவேண்டும்.

எதிர்வரும் ஜூலை 6ஆம் திங்கட்கிழமை 5,11 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி திங்கட்கிழமை 10 மற்றும் 12ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.அத்தோடு எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி திங்கட்கிழமை 3,4,6,7,8,9ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.எனினும், தரம் ஒன்று மற்றும் இரண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில் பாடசாலைகளுக்கு கிருமித் தொற்று நீக்கி விசுறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுக்கு உள்பட்ட பாடசாலைகளுக்கு இன்று புதன்கிழமை தொடக்கம் வரும் சனிக்கிழமை வரை பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.