தற்கொலைக்கு முன்னர் மனைவிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த மன்னார் செஞ்சிலுவை பிரமுகர்..!!

நேற்று அதிகாலை மன்னாரில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த, மன்னார் மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளரின் மரணம் தாடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்கொலை செய்வதற்கு சிறிது நேரம் முன்னதாக, மனைவிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, தற்கொலை செய்யவுள்ள விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளராக கடமையாற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆ.ரகு சங்கர் (43) என்பவரே தற்கொலை செய்தவராவார்.

நேற்று திங்கட்கிழமை காலை பெரிய கட்டு புகையிரத வீதிக்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு மன்னார் நோக்கி பயணித்த புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.நேற்று இரவு 7.30 அளவிலேயே அவர் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.அதிகாலை 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் எங்கே நிற்கிறார் என்ற தகவலை கூற மறுத்து விட்டார். அதன் பின்னர், மனைவியின் தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை.இந்த தகவலால் பதற்றமடைந்த மனைவி, உடனடியாக மன்னார் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த தகவல் புகையிரத கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவர் நிற்குமிடத்தை அடையாளம் காண முடியாததால், தற்கொலையை தடுக்க முடியாமல் போய் விட்டது.அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை. சில வருடங்களின் முன்னர் நண்பரொருவரை நம்பி, பல இலட்சம் ரூபா பணத்தை வட்டிக்கு கொடுத்து ஏமாற்றப்பட்டிருந்தார். எனினும், அது தற்கொலைக்கான காரணமல்ல என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.