பாய்வீட்டு பிரியாணி மட்டும் ஏன் இவ்வளவு ருசியாக இருக்கிறது?

பாய் வீட்டு பிரியாணி என்றாலே தனிச்சுவை உண்டு. அதில் என்னதான் சூட்சமம் உள்ளதோ? வருடத்தில் ஒருமுறை வரும் ரமலான், பக்ரீத் விசேஷங்களுக்கு அவர்கள் கொடுத்துவிடும், பிரியாணியின் டேஸ்ட்டை வருடம் முழுக்க நமது நாக்கு மறக்காது. என்ன மேஜிக் செய்வார்களோ? இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ளவே, பாய்வீட்டிற்கு ஃப்ரெண்டாக முயன்றேன். இந்த முயற்சியில் நல்ல நண்பர்களும் கிடைத்தார்கள், கூடவே பாய் வீட்டு பிரியாணியின் ரகசியமும் தெரிந்துகொண்டேன்.


பிரியாணி பொறுத்தவரையில், சீரக சம்பா, பொன்னி,பச்சை அரிசி இவற்றிற்கே முதன்மை இடம். அடுத்த இடம் தான் பாசுமதி அரிசிக்கு. நீங்க தேர்ந்தெடுக்கும் அரிசி என்னவாக இருந்தாலும், அது பழையதாக இருக்க வேண்டும் என்பது முக்கிமானது. சரி, பழைய அரிசியை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? என்ற சந்தேகம் இருக்கும். பழைய அரிசி என்றால் நிறம் பழுப்பாகவும், முகர்ந்து பார்க்க நல்ல மணமும் வீசும்.

மட்டன் பிரியாணியாக இருப்பின் இளம் ஆடு நல்லது. கோழி என்றால், ஒன்றரை கிலோ எடை இருப்பின் நல்லது.சமைக்கும் போது குக்கரை காட்டிலும், அகன்ற பாத்திரத்தை பயன்படுத்தலாம். குக்கரில் சமைக்கும் போது சாதம் குலைய வாய்ப்புண்டு. கறியும் உடைந்து போகலாம்.அடுத்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றை பொடி செய்யாமல் முழுவதுமாக போடுவது நல்லது. பொடி செய்தால் இவற்றின் மணம் பிரியாணியின் மணத்தை கெடுத்துவிடலாம்.

அடுத்து மிளகாயை காம்பு மட்டும் எடுத்துவிட்டு, முழுவதுமாக போட வேண்டும். கீறியோ, நறுக்கியோ போடுவதை தவிர்க்கலாம்.பூண்டை தேர்வு செய்யும் போது, சிறிய பல் கொண்டவற்றை எடுத்துக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை தனித்தனியாக பிரித்து அரைத்துக்கொள்ளவும். நன்றாக பழுத்த நாட்டு தக்காளி முக்கியம். ஹைபிரிட் வேண்டாம்.இவர்கள் கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் போன்றவைகளை சேர்ப்பதில்லை. கலப்படம் இல்லாத மிளகாய்தூள் போதுமானது.

அடுத்து புதினா மற்றும் கொத்தமல்லி இந்த கலவையை இரண்டாக பிரித்துக்கொளளவும். ஒன்றை இஞ்சிபூண்டு விழுது வதக்கிய பின்னரும் அடுத்த பங்கை தக்காளி வதக்கிய பின்னரும் சேருங்கள்.சமைத்து பார்த்து உங்களது நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டிலும் பாய் பிரியாணி தயார் .