உணவகங்களில் பதமான ஆப்பத்திற்கு மாவு எப்படி அரைக்கிறார்கள் தெரியுமா?

ஆப்பம் சுடுவது என்னமோ சுலபம் தான். மாவு ஒரு கரண்டியை, ஆப்ப சட்டியில் ஊற்றி ஒரு சுற்று சுற்றினால் மிருதுவான ஆப்பம் ரெடி. இதன் கூடவே ஏலக்காய், நாட்டுச்சர்க்கரை போட்டு தேங்காய் பால் செய்து உண்டால் இரவு தூக்கம் கண்ணை சொருகும். ஆரோக்கியமானதும் கூட. குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். ஆப்பம் சுடுவதில் உள்ள சூட்சமமே மாவை பக்குவமாக அரைப்பதில் தான் உள்ளது. அந்த சூட்சமம் பற்றி காண்போமா?


ஒரு படி அரிசியை ஊறவைத்து இடிக்கவும். இடித்த மாவை சல்லடையில் அரித்துக்கொள்ளவும். உலக்கை கொண்டு இடித்து செய்தால் சுவையே வேறு. இடிக்க சிரமமாக இருந்தால், ஒரு கப் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி இவற்றை ஒன்றாக ஊறவைத்து கொள்ளவும். வெந்தயம் மற்றும் உளுந்தை தனியாக ஊற வைத்து கொள்ளவும். மூன்று மணிநேரம் ஊறினால் போதுமானது. பின்னர் ஊறவைத்த எல்லாவற்றையும் ஒன்றாக சேர்ந்து அரைத்துக்கொள்ளவும். (உளுந்து – 50 கிராம், வெந்தயம் – 3 ஸ்பூன் )

பாதி அரைப்பட்டதும், தேங்காய் துருவியதையும் தேவையான அளவு உப்பு மற்றும் சமையல் சோடா சேர்த்துக்கொள்ளவும். சரியாக ஐந்துமணிநேரத்திற்கு பிறகு, மாவு ஆப்பம் சுட தயாராக இருக்கும். அரைத்த உடனே சுடக்கூடாதா ? என்ற சந்தேகம் கண்டிப்பாக எழும். அப்படி சுட்டால் ஆப்ப சட்டியில் மாவு ஒட்டிக்கொண்டு, ஆப்பத்திற்கு பதில் அடுப்பு கரி தான் விஞ்சும்.