கடப்பாரை இட்லிக்கு குட்பாய்… நல்லெண்ணையில் சுடச் சுட இட்லி செய்வது இப்படித் தான்.!!

அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நேரத்திலும் நம்ம சமையல் நுனி நாக்கில் நிற்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலான நம் வீடுகளில் இட்லிதான் காலை உணவு. ஒரு சில உணவகங்களில் இட்லிக்கு குஷ்பூ இட்லி, பொடி இட்லி, காஞ்சிபுரம் இட்லி என வகைவகையாக பெயர் வைத்தால், வீட்டில் சுடும் இட்லிக்கு கடப்பாரை இட்லி என்று தான் பெயர் வைக்க வேண்டும். அந்த அளவிற்கு திடகாத்திரமாக இருக்கும். பல ஆயிர ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்தாலும் திடம் மாறாமல் இருக்கும். இந்த வரலாற்றை மாற்றி அமைக்க விரும்புபவர்களுக்கு இந்த பதிவு.

இட்லியை பஞ்சு போல சுட்டு எடுக்க, இட்லிதட்டில் துணி கொண்டு அவிப்பது அவசியம். சிலர் வெறும் தட்டில் அவிக்கும் போது, இட்லி மென்மை தன்மை இழந்து விடுகிறது.மற்றொரு எளியமுறை, மாவுக்கு அரிசி, உளுந்து, வெந்தயம் ஊரவைக்கும் போதே அதனுடன் சிறிதளவு ஜவ்வரிசியை ஊரவைத்து இட்லி சுட்டு பாருங்க. தினமும் குஷ்பூ இட்லிதான்.

இட்லி சுட அரைமணிநேரம் முன்னர் மாவிற்குள் நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு கலந்து, மாவு ஊற்றி சுட்டுப்பாருங்கள். இட்லி மெதுமெதுவாக பஞ்சு போல இருக்கும்.இட்லிக்கு மாவு ஆட்டும் போது, உளுந்து பற்றாக்குறை ஏற்பட்டால் அடுத்து உளுந்து ஊறும்வரை காத்திருக்க முடியாத நிலை வரும்போது, 8-10 அப்பளத்தை ஊறவைத்து அரைத்து சேர்க்கும் போதும் இட்லி பஞ்சு போல் மென்மையாக எழும்.இதை தவிர அரிசி மற்றும் உளுந்தின் மொத்த அளவில் நான்கின் ஒரு பகுதியில் அவலை எடுத்துக்கொண்டு அதனை அரிசியுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்தாலும் மெதுமெதுவான இட்லியை பெறலாம்.

இட்லியை பிட்டாலே பால்கோவா போல தொண்டைக்குள் இறங்க மேற்கண்ட வழிமுறைகள் சாத்தியம் என்பது அனுபவரீதியாக முயன்ற இல்லத்தரசிகளின் கருத்து