உடலில் சுரக்கும் பால் அசைவமா? முட்டை அசைவமா?

இரத்தத்தில் ஒரு பாதி பாலாக சுரக்கும் என்றால், பால் அசைவம் தானே என்ற கோக்குமாக்கான கேள்வி நம் மனதில் வரலாம். அது தப்புங்க. பாலில் DNA கிடையாது. ஏனென்றால் அதில் உயிர் கிடையாது. சத்து மட்டுமே உள்ளது. ஒரு வேளை, அது சுரந்து நாளங்களின் வழியே வரும்போது, நாளங்கள் ‘உதிர்க்கும்’ செல்களில் DNA இருக்க, பாலில் கலக்கும் வாய்ப்புள்ளது. இது நிரூபிக்கப்படவில்லை. அப்படியே இருந்தாலும் அது சைவம் தான். ஏனென்றால் அதில் உயிர் இல்லை. அந்த செல்லோ DNA-வோ ஒரு தனி உயிரினமாக உருவாக முடியாது.


ஆனால் முட்டை அந்த மாதிரியானது அல்ல. அது உயிர். அதில் இருந்து ஒரு உயிரினத்தின் குஞ்சு உருவாகி, அதுவே பின்னர் பறவையாகவோ அல்லது வேறு உயிரினமாகவோ மாறுகிறது. முட்டை நம்மால் உட்கொள்ளப்படுவதால் அப்பறவை கொல்லப்படுகிறது. ஆகவே தான் பால் சைவம், முட்டை அசைவம் என்ற கேட்டகிரியில் வரும்.

சிறிய கீரை வகைகள், வெங்காயம், வேர்க்கடலை போன்ற தாவரங்கள் கூட உயிர்கள்தான். நம் உணவுக்காக இவை அடியோடு அகற்றி கொல்கிறோம். இவைகள் கூட வளர்ந்து என்றாவது தானாக சாகப்போகிறவைகள் தான். ஆனாலும் அவற்றை இயற்கையாக இறக்க விடாமல் மனிதனின் உணவு தேவைக்காக முன்னமே நாம் கொன்றுவிடுகிறோமே! அப்போ தாவரங்களும் அசைவம் தானா? என்ற சந்தேகம் வரலாம். அதுக்கும் விளக்கம் இருக்குங்க.

தாவரங்கள் மற்ற விலங்குகள் தின்பதற்காகவெ படைக்கப்பட்டவை. அதன் மூலமே அவை விருத்தியாகின்றன. அவை தானாக முன்வந்து நம்மைத் தின்னத் தூண்டுகின்றன. அதிலேயே அவற்றின் விருத்தி அடங்கியிருக்கிறது. அதுவே படைப்பின் விதி. கீரை வகைகள் பல அவ்வேர்களையோ , தண்டுகளையோ மீண்டும் நட்டு பயிர் செய்ய முடியும். நாம் செய்வதில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் எப்போதாவது ஏதாவது கோழியோ, ஆடோ உங்களிடம் தானாக அர்ப்பணித்து இருக்கின்றனவா? பிடுங்கப்பட்ட ஒரு செடியிலிருந்து வேறு பல செடிகள் பயிர் செய்து வளர்க்க முடியும். அதுபோல் அறுக்கப்பட்ட ஆட்டில் இருந்து வேறு ஒரு ஆடேனும் உருவாக்கிக்காட்ட முடியுமா? ஆக இயற்கையின் நியதி படி நம் முன்னோர்கள் சைவம், அசைவம் என்று தரம் பிரித்திருக்கின்றனர். இதில் விதண்ட வாதம் பேசி நாம் குழப்பத்தை உண்டுபண்ணிக்கொள்ள கூடாது.