ஊற வைத்த பழைய சோறு சாப்பிட்டால், இரும்பை வளைக்கும் அளவுக்கு தெம்பு வருமா? அறிவியல் ரீதியிலான விளக்கம்!

காட்டு வேலைக்கு போயி வந்த உடனே, ஒரு தூக்குப்போசி “புளு தண்ணி” குடிச்சா தான் உடம்புக்கு தெம்பா இருக்கும்னு அப்புச்சி சொல்வாங்க. இன்னைக்கு செய்த சாப்பாட்டை நாளைக்கு சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க. கேட்டா உடம்புக்கு கெடுதல்னு சொல்வாங்க. ஆனால் ஊற வைத்த பழைய சோறு மட்டும், எப்படி உடலுக்கு நன்மை தரும்?


சொல்றேன் கேளுங்க. “ஆற்று நீர் வாதம் போக்கும், அருவிநீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்” என்று சொல்வாங்க. இதில் ஊற வைத்த பழைய சோறைத்தான் சோற்று நீர் என்கிறார்கள். சுடச்சுடச் சாப்பாடு சாப்பிடுவதற்கும், மீந்து போன சப்பாட்டிற்குள் தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கு.

பொதுவாக கிராமப்பக்கம், மதிய வேளையில் சமைக்கும் சோறு மீதமாகிவிட்டால், அதனை மண் பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து, நன்கு நொதிக்கும் வரையில் விட்டு விடுவார்கள். அடுத்த நாள் காலையில், சின்ன வெங்காயம் நறுக்கிப்போட்டு, ஊறுகாய் போன்று பிடித்ததை சைடு-டிஷ்சாக வைத்துக்கொண்டு சாப்பிட்டால், புத்துணர்ச்சியாக இருக்கும்.

வெறும் சாதமாக இருக்கும் போது கிடைக்காத சத்து, நொதிக்கும் போது எப்படி கிடைக்கிறதென்றால், அரிசியில் உள்ள மாவுச்சத்து, உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களால் சிதைக்கப்பட்டு, எளிய பொருளாக மாறுகிறது. நமது உடலால் எளிதில் செரிக்க முடியாமல் இருக்கும் மாவுச்சத்து, பாக்டீரியாக்களால், பி-வைட்டமின்களாக மாற்றப்படுகிறது.

இது வைட்டமின் சத்து மாத்திரை சாப்பிடுவதற்கு சமமாகும். இதனால் தான் பழைய சோறு தண்ணி குடித்த உடனே உடலுக்கு தெம்பு வந்தது போலாகி விடுகிறது. அந்த காலத்தில், வயல் வெளியில், மண்வெட்டி, ஏர்பிடித்து அத்தனை வேலை செய்துவிட்டு, இறுதியாக ஒரு தூக்குப்போசி “புளு தண்ணி” என்று சொல்லப்படும் பழைய சோறு மட்டுமே குடிப்பார்கள். வயலில் செய்யும் அவ்வளவு கடுமையான வேலைக்கு, பழைய சோறு தண்ணி தெம்பு போதும்.