ரேஷன் அரிசியும் மண்ணில் தான் விளையுது, கடை அரிசியும் மண்ணில் தான் விளையுது! இருந்தும் ஏன் இவ்வளவு வேறுபாடு தெரியுமா?

ரேஷன் கடையில் வாங்கும் அரிசியும் மண்ணில் தான் விளையுது, கடையில் வாங்கும் அரிசியும் மண்ணில் தான் விளையுது, இருந்தும் தரத்தில் ஏன் இத்தனை வேறுபாடு இருக்கிறது? என்று பார்த்தால், எல்லாத்துக்கும் காரணம் நெல் அரவை முறையில் இருக்கும் வேறுபாடே. நெல் அரிசியாக அரைக்கப்படுவதற்கு முன்னர், அவிக்கப்பட வேண்டும்.


நெல் அவிக்க தண்ணீரில் கொஞ்ச நாள் ஊற வைக்க வேண்டும். அப்போது குறிப்பிட்ட இடைவெளியில், தண்ணீரை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அரிசி அனுப்பும் அரவை மில்கள், இதிலும் சிக்கனம் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்கிற பெயரில், தண்ணீரை மாற்றாமல், அப்படியே ஊற வைத்து விடுகின்றனர்.

பிறகு ஊற வைத்த நெல்லை வெளியே எடுத்து, வெப்பத்தில் அவிய வைக்கின்றனர். அடுத்து சூடு ஆறும் வரையில் உலர வைத்து, வெய்யிலில் காய வைக்க வேண்டும். அதிலும் மோசடி செய்ய முயற்சித்து, எடையை கூட்டிக்காண்பிக்க, சரியாக ஈரப்பதம் காய்வதற்கு முன்னரே எடுத்து விடுகின்றனர். அதனை அரவை செய்து அரிசியாக்கி குடோன்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அங்கு நெடுநாட்கள் வைத்திருக்கும் போது, ஏற்கனவே இருக்கும் ஈரப்பதம் காரணமாக பூஞ்சணம் பிடித்துவிடுகிறது. கொஞ்ச நாள் போகப்போக பூச்சிகள் கூட ஊர்வதை பார்க்க முடியும். மக்களுக்கு கொடுக்கும் அரிசி என்று தெரிந்தே, பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு சிலர் செய்யும் தவறு, எத்தனையோ பேரின் குடும்பங்களை இரத்தக்கண்ணீர் விட வைக்கிறது.

அரசுக்கு ஒப்பந்த முறையில் அரிசி சப்பளை செய்யும் ஆலைகள் சில எல்லாமே அறை வேக்காடு தான். ஊறல் தொடங்கி, அவியல், காச்சல் என எல்லாம் அவசர கதியில் மேற்கொள்வதால் வரும் வினை, கடையில் வாங்கும் அரிசிக்கும், ரேஷனில் வாங்கும் அரசிக்கும் வித்தியாசத்தை உண்டாக்குகிறது.

இது போக, அரவை முறை மட்டும் காரணமல்ல. அரசியிலும் உயர்ந்த ரகம் விலை குறைந்த ரகம் என்று, பல வகையில், பல தரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. முன்னர் ரேஷன் கடைகளில் சாதா அரிசி எனும் குண்டு அரிசி, சன்னரக அரிசி, மிக சன்ன ரக அரிசி ஆகியனவற்றுடன் பச்சரிசியும் வழங்கப்படும். ஒவ்வொரு ரக அரிசிக்கும் விநியோக விலை மாறுபடும்.