ரயில் பெட்டியின் கடைசியில் எக்ஸ்(x) அடையாளம் இருப்பது ஏன் தெரியுமா? இது மட்டும் இல்லாவிடில் அவ்வளவு தான்..!!

அப்போ ஒரு 5 வயது இருக்கும். அப்புச்சி வீட்டுக்கு போக வேண்டும் என்றால், இரயில்வே கேட்டை கடந்து, ஒரு பாலத்திற்கு அடியில் சென்று நின்றால் தான் டவுன் பஸ் வரும். எப்பாவது ஒரு நாள் மட்டுமே, இரயிலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், நான் போகும் நாள் பார்த்து இரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் செம குஷியாகி விடும். அப்போ எல்லாம் இரயிலை பார்ப்பதே, விமானத்தை நேரில் பார்ப்பதற்கு சமமாக இருக்கும்.


இரயில் தண்டவாளத்தில் காசு வைத்தால், அது காந்தமாக மாறும் என்ற புரளியை நம்பி, ஐந்து ரூபாய் காசை பறிகொடுத்து பின்னர், வீட்டில் வாங்கி கட்டிக்கொண்டது எல்லாம் வேறு கதை. அப்புச்சி வீட்டுக்கு போவதாக இருந்தால், இரயிலை பார்த்துவிட்டு தான் போக வேண்டும் என்று அடம் பிடித்த காலமும் உண்டு. சிறு வயதில் எனக்கும் ரயிலுக்குமான பந்தம் நெடுநாள் நீடித்திருந்தது. வீட்டில் வாங்கி குவித்த பொம்மையில் பாதிக்கும் மேல் இரயில் பொம்மை தான் என்றால், எந்த அளவுக்கும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இரயில் என்னை கடந்து போகும் போதெல்லாம், கடைசி பெட்டியில், பச்சை கொடி காட்டிகொண்டு சொல்பவருக்கு “டாட்டா” காண்பிப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ரயிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது, இரயிலின் கடைசி பெட்டியில் “X” என்ற குறியீடு இருப்பது கண்ணில் தென்பட்டது. நிறைய தடவை இரயிலின் கடைசி பெட்டியை பார்த்திருந்தாலும், அன்னைக்கு மட்டும் “X” என் கண்களை உறுத்தியது. அப்போ அதற்கான விளக்கம் கொடுக்கவும் யாரும் இல்லை.

இருபது வருடம் கழித்து, எனது இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரயில்வே பணி தேர்வுக்கு படிக்கும் போது தான் அதற்கான பதில் கிடைத்தது. இரயில் ஒவ்வொரு நிலையத்தைக் கடக்கும்போதும், நிலைய அதிகாரி “X” என்ற குறியீடு இருக்கிறதா என்பதை கவனிப்பார். ஒருவேளை அவர் பார்க்கும் கடைசி பெட்டியில், “X” என்ற குறியீடு இல்லையென்றால், நடுவில் பெட்டிகள் எங்கோ கழன்றுவிட்டது எனப்புரிந்து கொள்வார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல LV என்றும் சில வேளை குறிக்கப்பட்டிருக்கும். “Last Van – கடைசி பெட்டி” என்பதை தெரிவிக்க அவ்வாறு பதியப்பட்டிருக்கும்.