வேக கட்டுப்பாட்டை இழந்து தடைகளை உடைத்துக் கொண்டு வந்த கார் கோர விபத்து..!! ஒருவர் ஸ்தலத்தில் பலி..!!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று -பொத்துவில் பிரதான வீதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொத்துவில் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம் அருகில் உள்ள வளைவிலேயே நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் உயிரிழந்தவர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய எம்.ஏ.எம்.லாபிர் என திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.படுகாயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

பொத்துவில் பிரதேசத்திலிருந்து சம்மாந்துறையை நோக்கி சென்று கொண்டிருந்த கார் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம் அருகில் உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதி ஓரங்களில் நடப்பட்டிருக்கும் வீதி பாதுகாப்பு கட்டைகளையும் உடைத்துக்கொண்டு அருகில் உள்ள சிறிய பள்ளத்தில் பாய்ந்து குடைசாய்ந்துள்ளது.இவ்வாறு வீதியை விட்டு விலகி கார் 5ற்கும் மேற்பட்ட வீதி பாதுகாப்பு கட்டைகளையும் உடைத்துக்கொண்டு பாய்ந்து பலத்த சேதத்துக்குள்ளாகியதுடன் ஒரு புறத்தில் இருந்த பாதுகாப்பு கட்டை ஒன்று மறுபுறத்திற்கு தூக்கி வீசப்பட்டிருந்தது.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.