பிறந்த குழந்தையின் உச்சியில் குழி இருப்பதும், தலை சூடாக இருப்பதும் ஏன்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

பக்கத்து வீட்டு அக்காவுக்கு குழந்தை பிறந்திருந்தது. முதலில் பார்க்க செல்கிறோம் என்பதால், உச்சாந்தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்று அம்மா சொல்லவே, கையில் மெதுவாக எடுத்து குழந்தைக்கு தடவி விட்டேன். என்ன ஒரு ஆச்சர்யம், தலை நமக்கு மாதிரி இல்லாமல், மைதா மாவு பிசைந்து வைக்கப்பட்டதை போல கொளகொளவென இருந்தது. என்னம்மா இப்படி இருக்குன்னு நான் பயப்பட, “அடேய்! பிறந்த குழந்தைக்கு அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லி, அம்மாவும் ஒரு கை வாங்கி வைத்தார்கள்.


இயற்கையிலேயே சிக்கலான ஒரு பாகம் மனித மூளை தானாம். மாற்ற உறுப்புகளை போல அல்லாமல், குழந்தை பிறந்து மூன்று வயதுக்குள் முக்கால்வாசிக்கும் மேல் வளர்ச்சி கண்டுவிடும். அதனை தலையின் கபால ஓடு தாங்க வேண்டும் அல்லவா? அதற்காக தான், தலையில் தனி தனி மண்டை ஓடு அமைப்பு அமைந்திருக்கிறது. இது உச்சந்தலையில் மட்டும் இருப்பதில்லை. ஓடுகள் சேரும் அனைத்து இடத்திலும் இருக்கும். நமக்கு அதிகம் உச்சாந்தலையை தொட்டு பழக்கம் என்பதால், அந்த பகுதி மட்டும் மென்மையாக இருப்பது போல தெரிகிறது.

இந்த சவ்வு போன்ற அமைப்பு மண்டை ஓட்டினை விட கொஞ்சம் பலம் குறைந்தது என்பதால், குழந்தைகளுக்கு இந்தப்பகுதிகளில் அடிபடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பேதி, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது, உச்சிக்குழி நன்றாக அமுங்கியிருப்பதை காணமுடியும். ஒரு வயது அல்லது இரண்டு வயதுக்குள் உச்சிக்குழி எலும்புகளால் மூடப்பட்டுவிடும். அது வரையில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழந்தையின் உச்சிக்குழி மென்மையாக இருந்தாலும், தோல் நன்றாகவே மூடியிருக்கும் என்பதால் பயப்படதேவையில்லை.

அதே போல குழந்தைகளின் தலை சூடாக இருப்பதற்கான காரணம், குழந்தையின் உச்சிக்குழி கடினப்படாதது தான். எனவே, அந்த பகுதியில் உடலின் இரத்த ஓட்டத்தின் வெப்பம் நன்கு உணரப்படுவதால் சூடாக தெரிகிறது. குழந்தைப் பருவத்தில் மூளைவளர்ச்சி வேகம் அதிகம் என்பதால், குழந்தையின் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவும் சற்று அதிகமாக இருக்கும். அதன் விளைவாகவே எப்போது குழந்தையின் தலையை தொட்டாலும், சூடாகவே இருக்கும்.