எப்படி சாக்கடை நீரையே குடித்தாலும் விலங்குகளுக்கு ஒன்றும் ஆவது இல்லை? மறைந்திருக்கும் தற்காப்பு மர்மம்!

ஒரு மாதம் குடத்தில் வைத்திருந்த பழைய தண்ணீரை குடித்தாலே, நான்-ஸ்டாப்பாக வயிற்றிலும், வாயிலும் புடுங்கி தள்ளிவிடும். அப்படி இருக்கும் போது, நேற்று நான் கண்ட சம்பவம் என்னை வியக்க வைத்தது. தெருவில் சுற்றி திரியும் நாய் ஒன்று, வீட்டுக்கு அருகில் தேங்கியிருந்த சாக்கடை நீரை நாவல் நக்கி குடித்துக்கொண்டிருந்தது. நமக்கு பழைய தண்ணியே, பரலோகத்தை காட்டும் அளவுக்கு பேதியாக்கிவிடுதே, இவைகளுக்கு மட்டும் எப்படி ஒன்றும் ஆவதில்லை?

கொஞ்சம் ஆழ யோசித்து பார்த்தால், அவைகளின் தற்காப்பு திறன் வியக்க வைக்கிறது. விலங்குகள் அசுத்தமான நீரை குடித்தாலும், அழுகிய மாமிசத்தை உண்டாலும், பச்சை மாமிசத்தை அப்படியே விழுங்கினாலும், அதனை செரிக்க வைக்க, அதன் செரிமான மண்டலத்தில் அதிகமான வயிற்று அமிலம் சுரக்கிறது. இது பெரும்பாலான பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளைக்கொன்று விடுகிறது. பொதுவாகவே விலங்குகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

யானை, சிங்கம், புலி எதுவாக இருந்தாலும் நன்றாக உற்று நோக்கினால், தண்ணீர் குடிக்க ஒரே இடத்தை மட்டுமே தேர்வு செய்கின்றன. அருகில் தண்ணீர் குடிக்க வாய்ப்பு இருந்தாலும், பெரும்பாலும் அவை விரும்புவது, பழக்கப்பட்ட நீர்நிலையைத்தான். இதனால் விலங்குகளின் உடல்களில் அத்தகைய அழுக்கு நீருக்கு எதிராக ஒருவித நோயெதிர்ப்பு உருவாக்க முனைகின்றன. நாட்கள் செல்ல செல்ல அந்த நீர்நிலையில் இருக்கும் கிருமிகளை எதிர்க்கும் பண்பு, இயற்கையாகவே விலங்குகளின் உடலில் உருவாகிவிடுகிறது.

இப்படியே நோய்எதிர்ப்பு சக்தி மரபணு மூலமாக அடுத்தடுத்த சந்ததிக்கு மாற்றப்படுவதால், இனப்பெருக்கத்தினால் உருவாகும் அடுத்த தலைமுறை உயிரினம் இன்னும் அதிக வலு கொண்டதாக மாறுகிறது. இப்படித்தான் பன்மடங்கு வீரியத்துடன், விலங்குகள் நோய்க்கிருமிகளை எதிர்கொள்கின்றன. மிக முக்கியமாக, பெரும்பாலான விலங்குகளுக்கு ஒரு வாசனை உணர்வு திறன் இருப்பதால், இந்த நீரை குடிக்கலாமா? வேண்டாமா? என்பதை வாசனையை வைத்தே முடிவு செய்து விடும். கிருமிகளை காட்டிலும் விலங்குகள் அதிகம் இறக்க காரணம், ஒட்டுண்ணிகளால் மட்டுமே.