செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இலங்கையில் ஐ.பி.எல். தொடர்?

ஐ.பி.எல். ரி-20 தொடர் இம்முறை நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவிவருகின்ற நிலையில், இந்த தொடரை எதிர்வரும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இலங்கையில் நடத்தலாம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, முன்னதாக இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் 13ஆவது பருவகாலத்திற்கான போட்டிகளை மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் மே 24ஆம் திகதி வரையில் நடத்த தீர்மானித்திருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதற்கட்டமாக ஐ.பி.எல். தொடர், ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.ஆனால், தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஐ.பி.எல். தொடர் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால்இ ஐ.பி.எல். தொடரை இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.இதனிடையே இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் குறைந்தது, ஒக்டோபர் மாதம்வரை இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது பாதுகாப்பானதாக இருக்காது. மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் அடுத்த மாதம் நடக்கும் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்கலாமா? இல்லையா? என்பதை மதிப்பிடுவதற்கு உதவிகரமாக இருக்கும்.விளையாட்டு அரங்கிற்குள் குறைந்த அளவு இரசிகர்களை அனுமதிக்கலாம் என்ற அவுஸ்ரேலிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து அங்கு ரி-20 உலகக்கிண்ண தொடர் நடக்கக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. ரி-20 உலகக்கிண்ண தொடர் திட்டமிட்டபடி நடந்தால் அதன் பிறகு ஒக்டோபரில் ஐ.பி.எல். ரி-20 தொடரை நடத்துவது கடினமாகி விடும்.எனவே, செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்தலாம். அது பருவமழை காலம் என்பதால் அந்த சமயத்தில் இந்தியாவில் இந்த தொடரை வைக்க முடியாது. அதற்கு பதிலாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் ஐ.பி.எல். தொடரை நடத்தலாம்.ஒவ்வொரு அணியும் இரண்டு முறை மோதுவதற்கு பதிலாக தலா ஒரு தடவை மட்டும் மோதும் வகையில் போட்டி அட்டவணையை சுருக்க வேண்டும். இந்த வகையில், மட்டுமே இந்த ஆண்டில் ஐ.பி.எல். தொடரை நடத்த சாத்தியம் உள்ளது. இலங்கை இல்லாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தலாம்’ எனவும் அவர் கூறினார்.