இலங்கை மீது நம்பிக்கையில்லை! நிதி வழங்குவதை நிறுத்திய சர்வதேச நிறுவனம்..!

ஸ்ரீலங்கா அரசாங்கம் மீதிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதால், அரச திட்டங்களுக்காக நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான முகவர் அமைப்பு, நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் கடன் நிலைமைகள் மற்றும் பொதுவாக அரசாங்கம் கையாளும் நிதி கொள்கை சம்பந்தமாக எவ்வித நம்பிக்கையும் இல்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் ஜெய்கா நிறுவனம், ஸ்ரீலங்காவின் பழமையான மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்காளி அமைப்பாகும்.இந்த நிறுவனம் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக கடன் மற்றும் நிதியுதவிகளை வழங்குவதில் இருந்து விலகியுள்ளமையானது இலங்கைக்கு உதவி வழங்கும் ஏனைய சர்வதேச அமைப்புகளும் தூர விலகிச் செல்லும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கை கையாளும் கொள்கைகள் தொடர்பாக ஜெய்கா நிறுவனம் விசேடமான கவனத்தை செலுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிதியுதவிகளை வழங்குவதை ஜெய்கா நிறுவனம் நிறுத்தியிருந்தது.எனினும் கடனை திருப்பிச் செலுத்தும் நிலைமையை ஆராய்ந்து தற்போது நிதியுதவியை வழங்குவதை நிறுத்த தீர்மானித்துள்ளது.

கொழும்பு நகர மையமாக கொண்டு நிர்மாணிக்கப்படவிருந்த இலகுரக மோனோ ரயில் திட்டம் ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவிருந்தது. தற்போதைய நிலைமையில் அந்த திட்டத்தையும் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டியவில் இருந்து கொழும்பு துறைமுகம் வரை 225 கிலோ வோட் வலுக்கொண்ட நிலத்தடி மின் கம்பி இணைப்பு திட்டம் ஜெய்கா நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் இதுவே அந்த நிறுவனத்திடம் நிதியுதவியை கோரியிருந்த ஒரே திட்டமாகும். தற்போதைய சூழ்நிலையில், அந்த திட்டமும் சீர்குலையும் என தெரிவிக்கப்படுகிறது.