கர்ப்பம் ஆகியதை நாடி பார்த்துச் சொன்ன நம் முன்னோரின் அற்புதமான மருத்துவ முறை.!! பலரும் அறிந்திராத கலை வடிவம்.!!

நாடி கணிப்புமுறையில் கர்ப்பத்தைக் கூட, கணித்துக் கூறிவிடுகிறார்களே! இது எப்படி சாத்தியம்? கர்ப்பம் மட்டும் அல்ல, ஒரு மனிதன் எப்போது நோய் வயப்படுவான், எப்போது இயற்கையான முறையில் இறப்பான் என்பதைக்கூட கணித்து சொல்லிவிட முடியும். நாடி பார்க்கும் முறை என்பது, தமிழர்களின் தனிக்கலை. சித்த மருத்துவத்தில் அடிப்படை அம்சங்களில் ஒன்று. இதனை நன்கு கற்றுத்தேர்ந்தவர்களால் மட்டுமே சரிவர செய்ய முடியும். நானும் தான் வைத்தியன் என்று, அரைகுறை அறிவோடு சிலர் களத்தில் இறங்கியதே விளைவே, இன்றைக்கு பல இடங்களில், இந்தக்கலை விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.


நாடி பார்க்கும் கலை, துரதிர்ஷ்டவசமாக மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. அதன் ஒரு துளியே, நாடி பிடித்து கர்ப்பம் உண்டானதை கணிக்கும் முறை. நாடி கணித்தல் முறை மூலம் பெரும்பாலான உடல் சார்ந்து இயற்கையாக வரும் நோய்களை, உணவு பழக்கத்தை மாற்றியமைப்பதன் மூலமே குணப்படுத்திவிட முடியும். நாடி கணித்தல் முறையில் உள்ள அடிப்படைக் கூறுகளைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால், கண்ணுச்சாமிப் பிள்ளை எழுதிய “சிகிச்சா ரத்ன தீபம்” என்ற நூலினை படியுங்கள். இக்கலையின் அவசியமும், நுட்பமும் ஓரளவு விளங்கும்.

நாடி பிடித்து கர்ப்பம் உண்டானதை கணிக்கும் முறையில், நாடி பார்க்க வேண்டிய காலம், நேரம், நாடி பார்க்கப்படுபவரின் தன்மை, நாடிகளின் இயல்பு, நாடி கணிப்பவருடைய தன்மை, நாடிகணித்தலில் நேரிடும் தவறுகள் உள்ளிட்ட பலவிஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொத்தாம் பொதுவாக, இதுதான் “கர்ப்பநாடி” என்று கூறி விளக்கமுடியாது. திரைப்படங்களில் காட்டுவதுபோல நாடி கணிப்பதெல்லாம், பெயரளவுக்கு உதவுமே தவிர, ஆழ்ந்து பட்டதாக இருக்க முடியாது. நாடி கணிப்புமுறை என்பது மிகப்பெரிய அருங்கலை.

நமது முன்னோர்கள், நாடி கணித்தல் கலையில் அசகாய வல்லுநர்களாக இருந்தனர். இக்கலையோடு. அலோபதி மருத்துவத்தையும் பயின்று, தமிழத்தில் மருத்துவ துறையில் புதிய புரட்சியை ஏற்ப்படுத்திய மருத்துவர்களும் உண்டு. ஆங்கில மருத்துவத்தில் சோதனை செய்து கண்டுபிடிக்கப்படும் சில நோய்களை, நாடி பிடித்து கணித்தே கண்டுபிடிக்க முடியும். முறையான பயிற்சி, அடுத்து வந்த தலைமுறையினரிடம் பரவிய ஆங்கில மருத்துவ மோகத்தால், இன்றைக்கு வெகு சொற்ப அளவிலேயே இதனை கற்றுத்தேர்ந்தவர்களை காண முடிகிறது.