48,000 ஆண்டுகளின் முன்னரே இலங்கையில் நடைமுறையில் இருந்த அம்பு, வில் தொழில்நுட்பம்! ஆய்வுகளில் வெளியான ஆச்சரியத் தகவல்..!

இலங்கையில் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் விலங்குகளின் எலும்புகளிலிருந்து கருவிகளை வடிவமைத்து குரங்குகள் மற்றும் அணில்களை வேட்டையாடப் பயன்படுத்தினர் என்ற ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்கு வெளியே, தொன்மையான வில் மற்றும் அம்பு பயன்பாட்டின் ஆதாரங்களை இலங்கையிலேயே கண்டறிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு, ஃபா-ஹீன் லீனா குகையில் மீட்கப்பட்ட குரங்கு மற்றும் அணில் எலும்புகளை ஆய்வு செய்ததிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் ஆடை வடிவமைத்தமைக்கான சான்றுகளும் அங்கு கிடைத்துள்ளன.ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹ்யூமன் ஹிஸ்டரியின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பற்ரிக் ரொபர்ட்ஸை மேற்கோளியிட்டு, அறிவியல் இதழொன்று நேற்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.இந்த குகை தெற்காசியாவில் ஹோமோசேபியன்களின் ஆரம்பகால புதைபடிவ தோற்றத்தின் இடமாகும். 4,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் மனிதர்கள் இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளமைக்கான சான்றுகள் ஆராய்ச்சியில் வெளியாகியுள்ளது.குகையில் மீட்கப்பட்ட எலும்புகள் சில, வேட்டைக்கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இவற்றின் மூலம் மழைக்காடுகளில் உள்ள அணில்கள், குரங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளன.

பற்ரிக் ரொபர்ட்ஸ் தெரிவித்தபோது- “சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த தளம் இலங்கையின் நவீன வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்பட்டது. இந்த சூழல்கள் மனித ஆக்கிரமிப்புக்கு தடைகள் என்று நீண்ட காலமாக கருதப்படுகிறது, குறைந்த இரையின் வாய்ப்புகள், நச்சு தாவரங்கள் மற்றும் நோய் சவால்களால் மனிதர்கள் வாழ சிரமமான இடமாக இதுவரை கருதப்பட்டு வந்தது” என்றார்.செதுக்கப்பட்ட விலங்கு எலும்பிலிருந்து 130 எறிபொருள் புள்ளிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பல புள்ளிகள் தாக்க முறிவுகளைக் கொண்டிருந்தன.”இது ஆபிரிக்காவிற்கு வெளியே மனித மழைக்காடு ஆக்கிரமிப்பு மற்றும் பயன்பாட்டிற்கான ஆரம்பகால சான்றுகளில் ஒன்றாகும்.” என தெரிவித்துள்ளார்.குரங்குகள், அணில்கள் மற்றும் பிற சிறிய பாலூட்டிகளை வேட்டையாட எலும்பிலான சிறிய வில்-அம்புகளை பயன்படுத்தி, காலப்போக்கில், பன்றிகள் மற்றும் மான் உள்ளிட்ட பெரிய விலங்குகளை வேட்டையாட மனிதர்கள் தங்கள் கருவிகளின் நீளத்தை அதிகரித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் Griffith University தொல்லியல் துறை மூத்த பேராசிரியர்
பேராசிரியர் மைக்கேல் லாங்லியின் கூற்றுப்படி, கண்டெடுக்கப்பட்ட விலங்கு
எலும்புக்கூட்டில் உள்ள அடையாளங்களின்படி வில் மற்றும் அம்புகள்
பயன்பாட்டுடன், வேட்டை விலங்குகளின் எலும்பு முறிவுகளும் தென்படுவதாக தெரிவித்துள்ளார்.இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இந்த எச்சங்கள் தென்னாசியாவிலேயே மிகப்பழமையானவை என்றும் தெரிவித்துள்ளார்.

“வில்-அம்பு தொழில்நுட்பங்கள் உண்மையில் 64,000 ஆண்டுகளுக்கு முன்பு எலும்பு-வில்- அம்பு தொகுதிதான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை சான்றுகளில் மீட்கப்பட்ட வேட்டை கருவி தொகுதிகளில் எலும்பிலான அம்பு-வில் தொகுதியும் ஒன்று“ என ரொபர்ட்ஸ் கூறினார். வெப்பமண்டல மழைக்காடுகளில் சிறிய, விரைவான பாலூட்டிகளை வேட்டையாட வேறு பல கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.இலங்கை கடற்கரையில் பண்டைய மனித வாழ்விடங்களை அகழ்வாராய்ச்சி செய்யும் பணியில் தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வெவ்வேறு மனித குழுக்கள் கடற்கரை மற்றும் நாட்டின் உள் காடுகளுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.