கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்! புதைக்க இடம் இல்லாததால் திண்டாடும் நாடு.!

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் அந்நாடு தவித்து வருகிறது. முக்கிய நகரான சா போலோவால் உடல்களைப் புதைக்க பழைய கல்லறைகளைத் தோண்டி அப்புறப்படுத்தி, உடல்களை அடக்கம் செய்யும் அவலத்துக்கு அந்நாடு சென்றுள்ளது.


உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழப்பிலும் தொற்றிலும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அதற்கு அடுத்த இடத்தில் தற்போது பிரேசில் இடம்பெற்றுள்ளது.கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மட்டும்தான் 2வது இடத்தில் இருந்த பிரேசில், தற்போது உயிரிழப்பிலும் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரஸால் ஒட்டுமொத்தமாக 8 இலட்சத்து 29 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்து 901 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருவதே திடீரென அதிகரிப்புக்குக் காரணமாகும்.இதற்கு முன் பிரிட்டன் உயிரிழப்பில் 41,481 பேர் என்ற எண்ணிக்கையில் 2வது இடத்தில் இருந்தது. அந்த இடத்துக்கு தற்போது பிரேசில் சென்றுள்ளது.

பிரேசில் நாட்டின் மிகப்பெரிய மெட்ரோ நகரான சா போலாவோவில் கொரோனா உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் மடிகிறார்கள். இதனால் உயிரிழந்தவர்களைப் புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் நகர நிர்வாகம் திக்குமுக்காடி வருகிறது.இதனால் வேறு வழியின்றி சா போலாவில் உள்ள மிகப்பெரிய கல்லறையான விலா ஃபோர்மோசா கல்லறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்துவிட்டு அந்த இடத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

இது குறித்து சா போலா மெட்ரோ நகர நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிக்கையும் வெளியிட்டுவிட்டது. அதில், “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு அந்த இடத்தில்உள்ள எலும்புகள் ஒரு பிளாஸ்டிக் பையில் போடப்பட்டு அடையாளமிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த எலும்புகளை வைப்பதற்காகவே தனியாக 12 கன்டெய்னர்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கன்டெய்னர்கள் 15 கல்லறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மிகப்பெரிய கல்லறையான விலா ஃபோர்மோசா கல்லறையில் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.இந்தக் கல்லறையில் பணியாற்றிவரும் அடநெல்சன் கோஸ்டா கூறுகையில், “இந்தப் பணிகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. சவப்பெட்டியிலிருந்து எலும்புகளை எடுத்து பிளாஸ்டிக் பைகளில் போடும் பணியைச் செய்ய முடியவில்லை. எங்களுக்கு என்ன நடக்குமோ எனும் அச்சம் இருக்கிறது.

ஆனால், இன்னமும் பிரேசலில் ஷொப்பிங் மோல்கள், கடைகள் திறந்திருப்பதும் மக்கள் சுதந்திரமாக அலைவதும் வேதனையைத் தருகிறது. நாங்கள் கொரோனா பாதிப்பின் உச்சத்தில் இருக்கிறோம் என்பதை மக்கள் உணரவில்லை. மக்கள் தொடர்ந்து வெளியே வந்துகொண்டிருந்தால் கொரோனா ஓயாது. இன்னும் மோசமாகப் போகிறது” எனத் தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் மாதம் இந்தக் கல்லறையில் 1,654 உடல்கள் புதைக்கப்பட்டன. மார்ச் மாதம் 500க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டன. ஆனால் மே, ஜூன் மாதத்தில் உடல்கள் புதைக்கப்பட்ட எண்ணிக்கை தெரியவில்லை.சா போலா நகரில் மட்டும் இதுவரை 5,480 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நகரில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளது அந்நகர மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.