பல்கலைகழக பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவனின் தற்போதைய நிலை!

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தில் மூத்த மாணவர்களின் பகிடிவதைக்கு ஆளான நிலையில் கடுமையான காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று.இந்த நிலையில் அவர் நேற்றையதினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.முதலாம் வருட மாணவனான பசிந்து ஹிருஷன் என்ற மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தார்.


பகிடிவதையால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மாணவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அதன்பின்னர் சுமார் 98 நாட்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மூன்று மாதங்களுக்குப் பிறகு, பசிந்து வீடு திரும்பினார்.
இதன்போது அவரது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியும் வீட்டில் சிறிய வரவேற்பு நிகழ்வை செய்தனர்.

ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் பசிந்து ஹிருஷன், மார்ச் 5 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரவேற்பு விருந்தில் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார்.இந்த விவகாரம் அண்மையில் இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டதுடன் அம் மாணவனிற்காக சில பிரதேசங்களில் விகாரைகளில் வழிபாடும் நடத்தப்பட்டது.மூத்த மாணவர்களின் பகிடிவதை செயற்பாட்டிலேயே மாணவன் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பசிந்து சுயநினைவடைந்த போதும், விபத்து பற்றி எதுவும் நினைவில் இல்லை என்று அவரது சகோதரன் கூறினார்.பல்கலைக்கழக வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில், ஒரு பெரிய டயர் மூத்த மாணவர்களின் குழுவால் உயரமான மேடையிலிருந்து கீழே உருட்டி விடப்பட்டிருந்தது. கீழே இருந்த பசிந்து மீது டயர் மோதி அவர் படுகாயமடைந்தார்.இந்த நிலையில் டயரை உருட்டிவிட்ட பல்கலைக்கழக மூத்த மாணவர்கள் வழக்கு விசாரணையை முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.