தீ, கொப்பளம் இப்படி நீர் கோர்த்து புடைத்துக்கொண்டால், என்ன செய்ய வேண்டும்? பதறாமல் இதை மட்டும் செய்தால் போதுமாம்!

லாக்-டவுன் என்பதால், எங்கள் வீட்டில் ஒருத்தருக்கும் வேலை இல்லை. இடையில் மழையும் அவ்வப்போது தூறல் போட, நமக்கு சொல்லவா வேண்டும்? சுடச்சுட டீ, காபி போட்டு, போண்டா சுட்டு சாப்பிட்டால் தான் மனசு ஆறும். இப்படி ஆசை ஆசையாக போன வாரம் போண்டா, பஜ்ஜி சுட ரெடியானோம். மாவு எல்லாம் நானே கலக்கி கொடுக்க, அம்மா எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க ரெடியா இருந்தாங்க. அரிக்கி கரண்டி தண்ணீரில் கழுவி சரியா துடைக்காமல், எண்ணெய் சூடாக, சூடாக உள்ள போட்டாங்க.

உடனே சட புடன்னு எண்ணெய் தெறித்து அம்மா கையில் பட்டது. ஓடிச்சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வந்து, கைகளை அதற்குள் வைக்க சொன்னேன். கொஞ்சம் நேரம் கழித்து எரிச்சல் நின்றது. ஆனால் சுடு எண்ணெய் பட்ட இடத்தில், புசு புசுவென வீங்கி, நீர் கோர்த்த மாதிரி கொப்பளம் வந்தது. இப்போ கொப்பளம் உடைஞ்ச எரிச்சல் பயங்கரமா இருக்கும். அதுவே உடையட்டும், காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இரவு தூங்கச்சென்றோம்.

நான் சொன்ன மாதிரியே காலையில் கொப்புளம் உடைந்து இருந்தது. இந்த மாதிரியான சிறிய தீக்காயம் ஆறுவதற்கு குறைந்தது இரண்டு வாரம் ஆகும். அதுவரைக்கும் புண் கொந்தி விடக்கூடாதல்லவா? அதற்கு பாட்டி சொல்லிக்கொடுத்த வீட்டு வைத்தியத்தை செய்தோம். கற்றாழையை வெட்டி எடுத்து அதில் வரும் ஜெல்லி போன்ற வழவழப்பான கூலை அதன் மேல் தடவினோம். இரவு தூங்கச்செல்லும் போது மட்டும், நீரில் நன்றாக கழுவிவிட்டு, சுத்தமான பருத்தி துணி கொண்டு துடைத்து, ஆண்டிபயாடிக் ஆயில்மெண்டை தடவிவிட்டோம்.

இப்படி செய்து வந்தால், இயற்கையாவே சருமத்தில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் மெதுவாக குணப்படுத்திவிடும். ஈரம் பட்டால் மட்டும், பருத்தி துணி கொண்டு சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்போ கொப்புளம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். புண் எல்லாம் ஆறி, தழும்பு மட்டும் தெரிகிறது. பெரிய அளவில் பாதிப்பும் இல்லை. இதே பெரிய தீக்காயம் என்றால், வீட்டு வைத்தியம் ஆகாது. உடனே மருத்துவமனையை நாடுவது நல்லது.