தலைவலியென அடிக்கடி தைலம் தேய்ப்பது சரியா? கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்..!

வெயிலில் அழைந்து வந்தால் தலைவலி, அதிகமாக வேலை செய்தால் தலைவலி, வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் தலைவலி என அடிக்கடி தலையை பிடித்து கொண்டு படுத்துவிடுபவர்களை நம் வீட்டிலேயே பார்த்திருப்போம். நரம்பியல் நிபுணரை அணுகினாலும், எந்த பிரச்சனையும் இல்லை நல்லாத்தான் இருக்கிறீர்கள் என்பார்கள். வலிக்கும் போது சாப்பிட வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே எழுதி கொடுத்திருப்பார். அது இதுவென கடைசியில் இரண்டு ரூபாய் தலைவலி தைலம் வாங்கி தேய்த்தால் வலி காணாமல் போகும்.


உண்மையில் வலி காணாமல் போவதாக உணர்கிறோம். ஆனால் தைலம் ஏற்படுத்தும் எரிச்சலில் தலைவலி மறைந்து போகிறது என்பதே நிதர்சனம். இப்படி பழகுகையில் தைலம் இன்றி தூக்கம் வராமல் தினமும் தலைமேட்டில் தையலத்தை வைத்து கொண்டு, அவசியப்படும் போதெல்லாம் தைலம் தேய்த்துவிட்டு உறங்குபவர்கள் ஏராளம். அதுவும் சிலர் சூடுபறக்க தேய்ப்பார்கள். அந்த இடத்தில் பரு, கொப்புளம் போன்ற தோல் பிரச்சனை இருந்தால் அவ்வளவு தான். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, எந்த பாதிப்பும் வராவிடினும் ஒரு பழக்கமாகிவிடக்கூடும்.

சிலர் குழந்தைகளுக்கு சளிப்பிடித்தாலே தைலம் தேய்த்து விடுவார்கள். தைலத்தில் எரிச்சல் அதிகமாக இருக்கும் போது பெரியவர்களாலே அதனை பொறுத்துக்கொள்ள முடியாது. அப்படி இருக்க குழந்தைகளுக்குத் தடவும் போது, எரிச்சல் தாங்குமா? அதுவும் குழந்தைகளின் மென்மையான மூக்கில் தேய்க்கும் போது, மூக்கு மிளகாய் பழம் போல சிவந்து, தைலம் தடவிய இடத்தில் அலர்ஜி ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக தைலம் தேய்க்கும் போது, contact dermatitis எனும் தோல் ஒவ்வாமை வரக்கூடும்.

நாளுக்கு நாள் தைலம் தேய்க்கும் போது, அந்த இடம் கருத்து போகவும் வாய்ப்புகள் அதிகம். ஒருமுறை தைலம் தேய்த்து அலர்ஜி ஏற்பட்டால், மறுமுறை அதனை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சூடுபறக்க தேய்ப்பதை தவிர்த்து, லேசாக தடவினாலே அதற்குரிய பலனை அளிக்கும். மேலும் அவசியம் அல்லது வலி இன்றி பயன்படுத்துவது காலப்போக்கில் தேவை இல்லை என்றாலும் கூட மனது அதை தேட ஆரம்பிக்கும் என்பதால் வலி ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்தலாம்.