வீட்டு பல்பை விட சின்னதாக இருந்தும், வண்டியில் முன்னால் உள்ள விளக்கு அதிக தூரம் ஒளி வீசுவது எப்படி?

வீட்டு பல்ப் பியூஸ் போனதால், அப்பா குண்டு பல்ப் வாங்கி வரச்சொல்லி, காசு கொடுத்து கடைவீதிக்கு அனுப்பி வைத்தார். இரண்டு நாட்களாக ஸ்கூட்டர் லைட்டும் எரியவில்லை என்று, அப்படியே வரும் போது, அதற்கும் சேர்த்து பல்ப் வாங்கி வரச்சொன்னார். இந்த கொரோனா பிரச்சனையில் நிறைய கடைகள் பூட்டியிருக்க, அலைந்து திரிந்து, கடைசியில் ஒரு கடையில் இரண்டு வகையான பல்பும் கிடைக்க, கோடி கும்பிடு போட்டு வாங்கி வந்தேன். எல்லாம் நல்ல படியா அமைந்து, அந்த நாளில் உருப்படியா ஒரு வேலை செய்து முடித்தோம்.


பிறகு ரொம்ப நேரம் தூக்கமே இல்லை. தூக்கம் வராமல் இருந்தால், எனக்கு கொஞ்சம் குதற்கமா யோசிக்க தோன்றும். நான் நினைச்ச மாதிரியே, ஒரு சந்தேகம் வந்தது. வீட்டுக்கு வாங்கி வந்த குண்டு பல்பை விட, ஸ்கூட்டருக்கு வாங்கி வந்த பல்பு சிறியது. இருந்தாலும், குண்டு பல்பை விட, ஸ்கூட்டர் பல்பு ரொம்ப தூரம் ஒளி வீசுகிறதே, அது எப்படி? இதற்கான விடையை தேடி கண்டுபிடிக்க, ஸ்கூல் புத்தகம் வரைக்கும் தேட வேண்டி இருந்தது. சிம்பிளான அறிவியல் தான். நமக்கு யோசிக்க நேரமில்லை அவ்வளவே.

டிவி பார்க்க உதவும் டிஷ், ஸ்பீக்கர், கூம்பு ஒலிபெருக்கி எல்லாம் எந்த தத்துவத்தில் இயங்குகிறதோ, அதே போலத்தான் வாகனத்தின் முகப்பு விளக்கும். ஏறக்குறைய இவை எல்லாவற்றின் வடிவமைப்பும் ஒன்று போலவே இருக்கும். இதன் பின்னணியில் இருப்பது, பரவளைய ஆடி (Parabolic Reflector) வடிவம். ஒளியாக இருந்தாலும், ஒலியாக இருந்தாலும், இந்த வடிவத்திற்குள் பல மடங்கு பெருக்கம் அடைந்து வெளியேறுமாம். வீட்டு பல்பை சும்மா விடுவதால், அது சுற்றிலும் குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டுமே ஒளியை பரப்பும்.

அதே வண்டியின் முன்னால் பொருத்தும் விளக்கு, குவியத்தின் நடுவில் பொருத்தப்படுவதால், உள்ளுக்குள்ளேயே பல மடங்கு, எதிரொலித்து, நீண்ட தூரத்துக்கு ஒளியை பாய்ச்சுகிறது. பின்ன அவ்வளவு சிறிய விளக்கு, கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும், வெளிச்சம் தருவது சும்மாவா நடக்கும்? அனால் தற்போது புதிதாக வரும் BMW கார்களில் இந்த நுட்பம் பயன்படுத்தப்படுவதில்லையாம். புதுசா ஒன்னு கண்டுபிடிச்சு இருக்காங்க. அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.