ரீசார்ஜ் செய்யும் பொழுது set up box I ஏன் on செய்து இருக்க வேண்டும்?

இரண்டு நாட்களுக்கு முன், டிஷ் டிவி ரீசார்ஜ் காலாவதியாகிவிட்டது. ஊரடங்கு நேரம் என்பதால் ஒரு சில கடைகளே திறந்திருந்தன. எப்படியோ தேடி கண்டுபிடித்து, அரசின் அனுமதியுடன் செயல்படும் ஒரு ரீசார்ஜ் கடையை கண்டுபிடித்தேன். பார்க்க செல்போன் ரீசார்ஜ் கடை போல இருந்தது. “அண்ணா டிஷ் ரீசார்ஜ் செய்வீங்களா?” என்று கேட்டேன். “பண்ணிக்கலாம் தம்பி, வீட்டுக்கு போன் போட்டு செட்டாப்-பாக்ஸ் ஆன் பண்ணி வைக்க சொல்லு” என்றார். அவர் சொன்னபடியே செய்துவிட்டு, ரீசார்ஜ் பண்ணி முடிந்த பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.


ஆனாலும் ஒரு குழப்பம். மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது, காசு போட்ட உடனே மெசேஜ் வந்து விடுகிறது. செட்டாப்-பாக்ஸ் ரீசார்ஜ் செய்யும் போது. ஆச்சா இல்லையா என்று எதுவுமே தெரியாது. இருந்தாலும் எதற்கு ஆன் பண்ணி வைக்க சொல்றாங்க என்ற சந்தேகம் இருந்தது. இது குறித்து இணையத்தில் சில தகவல்களை தேடினேன். புரியாத சிலவற்றை ரீசார்ஜ் கடை வைத்திருக்கும் அந்த அண்ணனிடமே கேட்டு தெரிந்து கொண்டேன்.

மொபைல் என்றால் இருவழி தகவல் தொடர்பு சாதனம். அதனால் தகவலை பெறவும் முடியும், அனுப்பவும் முடியும். ஆனால் செட்டாப் பாக்ஸ் ஒரு வழி தகவல் தொடர்பு சாதனமாகும். அதனால் தகவலை பெற மட்டுமே முடியும். அனுப்ப இயலாது. டிஷ் ரீசார்ஜ் செய்யும் போது, ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு நாம் கட்டிய பணம் சென்று சேரும். பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த அனுமதி அளிக்கும் நேரம், வெறும் ஒரு நொடிக்கும் குறைவாகவே இருக்கும். அச்சமயம் நம்வீட்டில் செட்டாப்-பாக்ஸ் செயலில் இல்லாவிட்டால் அந்த அனுமதியை சேமிக்க முடியாது. அதனால் தான் ஆன் செய்து இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

சரி, செட்டாப்-பாக்ஸ் ஒரு வழி தகவல் தொடர்பு சாதனம் என்று சொல்றீங்க. அப்போ டி.ஆர்.பி எப்படி கணக்கிடப்படுகிறது? செட் டாப் பாக்ஸ், நாம் பார்க்கும் சேனலின் விவரத்தை அனுப்பாவிட்டால், பிறகு எப்படி கணிக்க முடியும் என்ற சந்தேகம் வரலாம். டி.ஆர்.பி க்கு என்றே தனிப்பட்ட கருவி டி.வியில் பொருத்தப்படும். அது எல்லா வீடுகளிலும் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் அனுமதியுடன் பொருத்தப்படும். அதில் சேகரிக்கும் தகவல்களை வைத்து டி.ஆர்.பி. முடிவு செய்யப்படும்.